பாஷாரத் மசூத், கட்டுரையாளர்
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு நடைமுறைக்கு வரும்போது அக்டோபர் 31 ஆம் தேதி ஆடம்பரமாக விழா நடத்துவதற்கு எதிராக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அக்டோபர் 31 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு நடைமுறைக்கு வரும் போது ஆடம்பரமாக விழா நடத்துவதற்கு எதிராக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிவிப்புக்கு ஏற்ப 370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்கு கொண்டுவந்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
அரசு அதிகாரிகளையும் ஊழியர்களையும் அந்தந்த யூனியன் பிரதேசங்களில் தொடர்ந்து பதவிகளை வகிக்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பொது நிர்வாகத்துறையால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு இன்றியமையாததாக மாறியுள்ளது. ஏனென்றால், அதன் மனித வளத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிக்க அரசாங்கம் இன்னும் அழைப்பு விடுக்கிறது.
இந்தியாவுடன் ஜம்மு - காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்பை விரும்பிய சர்தார் வல்லபாய் படேலின் படத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து முக்கிய அலுவலகங்களில் வைக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
லடாக், ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டு துணை நிலைஆளுநர்களுக்கும் முறையே லே மற்றும் ஸ்ரீநகரில் இரண்டு விழாக்களை நடத்துமாறு மத்திய அரசு மாநில நிர்வாகத்திடம் கோரியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அவை ஆடம்பரமான நிகழ்ச்சியாக இல்லாமல் குறைந்த முக்கியத்துவமுள்ள விவகாரங்களாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அழைப்பும் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை என்றாலும், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட சில செய்தி நிறுவனங்கள் மட்டுமே அழைக்கப்படலாம் என்று மாநில நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.
லேவில் ஏற்பாடு செய்யப்படும் முதல் விழாவில் ராதாகிருஷ்ண மதுர் லடாக்கின் முதல் துணைநிலை ஆளுநராக பதவியேற்பார். இதைத்தொடர்ந்து, இதேபோன்ற விழாவில் ஸ்ரீநகரில் உள்ள ராஜ்பவனில் கிரிஷ் சந்திர முர்மு ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக பதவியேற்பார். இந்த பதவியேற்பை ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் நடத்திவைப்பார்.
மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதால் தலைமை நீதிபதி மீண்டும் பதவிற்க செய்யுமாறு கேட்கப்படுவாரா என்பது குறித்து மாநில நிர்வாகத்திற்கு தெளிவாகத் தெரியவில்லை. ஜம்மு காஷ்மீர் சட்டத்துறை செயலாளர் அச்சல் சேத்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “இந்த உத்தரவு (தலைமை நீதிபதி பதவியேற்பு) மத்திய அரசால் வழங்கப்பட வேண்டும். இது மாநில அரசின் விவகாரம் அல்ல. இப்போதைக்கு அத்தகைய உத்தரவு எதுவும் இல்லை.” என்றார்.
மறுசீரமைப்பு சட்டம் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றம் இரு யூனியன் பிரதேசங்களுக்கும் தொடர்ந்து பொதுவானதாக இருக்கும் என்று கூறுகிறது.
மறுசீரமைப்புச் சட்டப் பிரிவு 91 -ஐ குறிப்பிடும் மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒவ்வொரு நபரும் நியமிக்கப்பட்ட நாளுக்கு முன்பே அதாவது, 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி தற்போதுள்ள ஜம்மு காஷ்மீர் விவகாரங்களுடன் தொடர்புடைய எந்தவொரு அலுவலகம் அல்லது பதவியின் பணிகளை வகிப்பவர்கள் அல்லது பதவிலிருந்து வெளியேறுபவர்கள், பின்னர் வரும் யூனியன் பிரதேசங்களில் எந்தப் பகுதியில் அவர்களுடைய பதவி வருகிறதோ அவர்கள் அதே அலுவலகத்தில் அல்லது அதே பதவியை வகிக்கலாம். அந்த நாளில் இருந்து பின்னர் வருகிற யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்தினாலோ அல்லது வேறு பொருத்தமான அதிகாரத்தினாலோ அந்த பதவிக்கு அல்லது அலுவலகத்திற்கு முறையாக நியமிக்கப்பட்டதாக கருதப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் அவர்கள் பணி அமர்த்தப்படுவது குறித்து அதன் ஊழியர்களிடமிருந்து ஒப்புதலையும் விருப்பத்தையும் கோரும் செயல்முறையை அரசாங்கம் ஏற்கனவே முடித்துவிட்டது. இரண்டு யூனியன் பிரதேசங்களில் ஏதேனும் ஒன்றில் அவர்களுடைய பதவிக்கு முன்மொழிகிற இரண்டு பக்க படிவத்தை ஊழியர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு தனி தலைமைச் செயலாளர்களையும், லடாக்கிற்கு ஒரு காவல்துறை தலைவரையும் (ஐ.ஜி) அரசாங்கம் இன்னும் நியமிக்கவில்லை.