Jammu Kashmir' Governor Satya Pal Malik comment: ஜம்மு-காஷ்மீரில் போஸ்ட்-பேய்ட் சந்தாதாரர்களுக்கு மொபைல் சேவைகள் மீண்டும் அளிக்கப்பட்ட நிலையில், ஆளுநர் சத்ய பால் மாலிக் திங்கள்கிழமை, மக்கள் தங்கள் சாதாரண வாழ்க்கையைப் பற்றிப் பேசலாம், இளம் ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் சுதந்திரமாக தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
கத்துவாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் “இளம் சிறுவர் சிறுமிகளுக்கு முன்பு சிரமங்கள் இருந்தன. ஆனால், இப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசலாம். இப்போது, எந்த பிரச்சினையும் இல்லை. மிக விரைவில், நாங்கள் இணைய சேவைகளை மீண்டும் கொண்டுவருவோம்” என்று கூறினார்.
தகவல்தொடர்பு சேவைகளின் தடையை நியாயப்படுத்திப் பேசிய சத்ய பால் மாலிக், பயங்கரவாதிகள் அணிதிரட்டுவதற்கு பயன்படுத்தும் மொபைல் சேவைகளை விட காஷ்மீரிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் “தொலைபேசி இல்லை என்று மக்கள் சத்தம் போடுகிறார்கள். நாங்கள் தொலைபேசி சேவைகளை நிறுத்தினோம், ஏனென்றால், பயங்கரவாதிகள் அவற்றை தங்கள் நடவடிக்கைகளுக்கும் அணிதிரட்டலுக்கும் கற்பித்தலுக்கும் பயன்படுத்துகிறார்கள் என்பதால் நிறுத்தினோம்”என்று சத்ய பால் மாலிக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் “எங்களைப் பொறுத்தவரை, ஒரு காஷ்மீரியின் வாழ்க்கைதான் முக்கியமானது. தொலைபேசி முக்கியம் அல்ல. முன்பெல்லாம் மக்கள் தொலைபேசி இல்லாமல் வாழ்ந்து வந்தனர்”என்று கூறினார்.
கடந்த இரண்டு மாதங்களில், பள்ளத்தாக்கில் ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை. எந்த போராட்டமும் நடைபெறவில்லை என்று அவர் பாதுகாப்புப் படையினரின் கடுமையான கண்காணிப்பை அவர் பெருமைப்படுத்திக் கூறினார்.
“இதற்கு பிரதமர் (நரேந்திர மோடி) என்னை வாழ்த்தியிருந்தார். நான் இந்த பாராட்டுக்கு தகுதியானவன் அல்ல. சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்த காஷ்மீர் மக்களுக்கும் காவல்துறைக்கும்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றேன்” என்று சத்ய பால் மாலிக் கூறினார்.
காஷ்மீரில் 70 நாட்கள் தகவல் தொடர்பு முடக்கப்பட்ட பின்னர், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் போஸ்ட் பேய்ட் மொபைல் சேவைகள் திங்கள்கிழமை பள்ளத்தாக்கில் மீண்டும் அளிக்கப்பட்டன. போஸ்ட் பேய்ட் மொபைல் போன் சேவைகள் - பள்ளத்தாக்கில் சுமார் 40 லட்சம் இணைப்புகள் உள்ளன. அவை திங்கள்கிழமை நண்பகல் முதல் செயல்படுத்தப்படும் என்று அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. ஆனால், இணைய சேவைகள் இன்னும் மீட்டமைக்கப்படவில்லை.
இங்கே செல்போன் சேவைகளை மீண்டும் அளிப்பது என்பது ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்துவதில் நிர்வாகத்தின் தொடர் அறிவிப்புகளின் ஒரு பகுதியாக உள்ளது.