தன்னுடைய படங்கள் ‘மார்ஃபிங்’ செய்யப்பட்டு வெளியான போது தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்திருந்ததாக நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயப்பிரதா பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
ஜெயபிரதா, பிரபலமான நடிகை. அவர் அளித்த மனம் திறந்த பேட்டி வருமாறு: “என்னுடைய படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டு வெளியான போது, இனி நாம் வாழவே கூடாது என முடிவெடுத்தேன். தற்கொலை செய்துக் கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டேன். ஆனால் அப்போது கூட எனக்கு உதவ யாரும் முன்வரவில்லை” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ‘ராஷ்ட்ரிய லோக் தால் கட்சியின் அமர் சிங்கிற்கு நான் ராக்கி கட்டியும் கூட என்னையும் அவரையும் இணைத்து தவறாகப் பேசுகிறார்கள். என்னுடைய மார்ஃபிங் படங்கள் வெளியான போது டயாலிஸில் சிகிச்சையில் இருந்தார் அமர் சிங். அதை முடித்துக் கொண்டு வந்து, அவர் மட்டும் தான் எனக்கு ஆதரவாக இருந்தார். அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். அவர் எனக்கு ‘காட் ஃபாதர்’. பிறர் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை” என்றார்.
தொடர்ந்த ஜெயப்பிரதா, ‘சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த, அஸாம் கானிடமிருந்து தனக்கு மிரட்டல்கள் வந்தது. அஸாம் கான் என்னை துன்புறுத்தினார். என் மேல் ஆசிட் வீச முயன்றார். அடுத்தநாள் நான் உயிருடன் இருப்பேனா என என் வாழ்க்கை நிச்சயமில்லாமல் இருந்தது. தினம் வீட்டை விட்டு வெளியில் வரும் போதெல்லாம், நான் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கை இல்லாமல் என் அம்மாவிடம் சொல்லி விட்டு வருவேன்.
முலாயம் சிங் யாதவ் ஒருமுறை கூட என்னை அழைத்து என் பிரச்னைகளைக் கேட்கவில்லை. இந்த ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நிறைய போராட வேண்டியுள்ளது. ‘மணிகர்னிகா’ படத்தைப் பார்த்த போது, அது நானாகவே உணர்ந்தேன்” என்றார்.
சமாஜ்வாடி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜெயப்பிரதா, அமர் சிங்குடன் இணைந்து, ‘ராஷ்ட்ரிய லோக் மன்ச்’ என்ற கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி 2012 உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் அதிக வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒருவரும் வெற்றி பெறவில்லை.
அமர் சிங் 2016-ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சிக்கு திரும்பவும் அழைக்கப்பட்டார், ஆனால் அகிலேஷ் யாதவ் கட்சி பொறுப்பை எடுத்துக் கொண்டபின் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இவர்கள் இருவருமே அஸாம் கானுடன் எதிரும் புதிருமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.