/indian-express-tamil/media/media_files/2025/04/21/YnSloB9Naf9shysAFo7D.jpg)
இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
4 நாட்கள் பயணமாக அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் டெல்லி வந்தடைந்தார். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவரின் மனைவி உஷா மற்றும் 3 குழந்தைகளும் அவருடன் இந்தியா வந்துள்ளனர். டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜே.டி. வான்ஸ் மற்றும் குடும்பத்தினரை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் வரவேற்றார். தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படையினரின் மரியாதையை ஜே.டி.வான்ஸ் ஏற்றார்.
டெல்லியில் பிரதமா் மோடியை இன்று மாலையில் சந்திக்கும் ஜே.டி. வான்ஸ், இருதரப்பு வா்த்தகம், வரி, பிராந்திய பாதுகாப்பு தொடா்புடைய முக்கிய விவகாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். தொடா்ந்து, ஜே.டி.வான்ஸ், உஷா ஆகியோருக்கு பிரதமா் இரவு விருந்து அளிக்கவுள்ளாா்.
மோடி தலைமையிலான இந்திய குழுவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோர் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரிவிதிப்புகளுக்கு இடையே வான்ஸின் முதல் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரி விதிப்பு, சந்தை அணுகல் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக, இந்தியா-அமெரிக்கா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், துணை அதிபா் ஜே.டி.வான்ஸின் முதல் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டில்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட நகரங்களுக்கும் வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
டெல்லியில் இருந்து ஜெய்பூருக்கு இன்றிரவு புறப்பட்டுச் செல்லும் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினா், அங்கு அம்பா் கோட்டை உள்பட வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை செவ்வாய்க் கிழமை பாா்வையிட உள்ளனா்.
புதன்கிழமை காலையில் உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவுக்கு செல்லும் ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினா், தாஜ்மஹால் மற்றும் ‘சில்பகிராமம்’ எனும் கலைப் பொருள்கள் கண்காட்சி-விற்பனையகத்தைப் பாா்வையிட உள்ளனா். பின்னர் வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) ஜெய்ப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்படுவார்கள் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.