காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதளம் கூட்டணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கர்நாடக அமைச்சரவையை மிக விரைவில் விரிவுப்படுத்தப் போவதாக கர்நாடக துணை முதலமைச்சர் ஜி. பரமேஷ்வர் தெரிவித்தார். கர்நாடக மாநகராட்சி அமைப்புகளுக்கான போர்ட் மெம்பர்களையும் மிக விரைவில் நியமிக்க இருப்பதாக கூட்டணி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி முடிவு செய்துள்ளது என பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.
தஷ்கின் கன்னடா மாவட்டத்தில் இருக்கும் தர்மஸ்தலாவுக்கு பரமேஷ்வர் வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, ‘‘இந்த வருடம் கர்நாடகாவில் கடவுளின் புண்ணியத்தால் நல்ல மழை பெய்திருக்கின்றது . வானிலை அறிக்கைகள் கூட இந்த வருடம் கர்நாடகாவில் நல்ல மழையிருக்கும் என்று சொல்லியுள்ளது. அதனால் தண்ணீருக்காக மக்கள் அவதிப்படமாட்டார்கள்’’ என்றார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கட்சியின் தலைமை மிக விரைவில் முக்கிய முடிவினை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராம்மைய்யாவை தர்மஸ்தலாவில் சந்தித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பரமேஷ்வர் “எதர்ச்சையாக நடைபெற்ற சந்திப்பு அது. மேலும் அவர் எங்கள் கட்சியின் தலைவர். எனவே அவரை சந்திக்க குறிப்பிட்ட காரணங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றும் அவர் பதிலளித்தார். நேச்சுரோபதி சிகிச்சைப் பெறுவதற்காக தர்மஸ்தலாவில் சித்தராம்மைய்யா தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.