பீகார் மாநிலத்தில் பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் ஜனதா தளம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டியலின மாணவர்களுக்கு விடுதி கட்டுவதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் மத்திய அரசு இத்திட்டத்தின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், 2022-23-ல் மாற்றப்பட்ட திட்டத்தின் கீழ் பீகாருக்கு எந்த மானியமும் வழங்கவில்லை என்று ஜே.டி.யு குற்றஞ்சாட்டியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த தலித் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான பாபு ஜக்ஜீவன் ராம் பெயரிடப்பட்ட திட்டத்தை மாற்றி, மத்திய அரசு அதை வேறு இரண்டு திட்டங்களுடன் இணைத்து, பிரதான் மந்திரி அனுசுசித் ஜாட்தி அபியுதாய் யோஜனா (PM-AJAY) என்று பெயர் மாற்றியுள்ளதாக ஜே.டி.யு தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தலித் தலைவர், துணைப் பிரதமர்
ஜேடி (யு) எம்.எல்.சி மற்றும் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “மத்திய அரசின் திட்டத்தில் ஒரு மாநிலத்தின் கணிசமான பங்களிப்பு இருந்தாலும், மத்திய அரசு பல திட்டங்களின் பெயர்களை தங்களது விருப்பப்படி மாற்றி, பெரும்பாலான திட்டங்களுடன் பிரதமர் என்ற வார்த்தையை முன்வைத்து வருகிறது. பாபு ஜக்ஜீவன் ராம் நாட்டின் சிறந்த தலித் தலைவர் மட்டுமல்ல, துணைப் பிரதமராகவும் இருந்துள்ளார்.
மோடி அரசாங்கம் ஜக்ஜீவன் ராம் பெயரை மாற்றம் செய்ததோடு மட்டுமல்லாமல், பெயர் மாற்றப்பட்ட திட்டமான PM-AJAY திட்டத்தின் கீழ் பீகாருக்கான மானியத்தையும் நிறுத்தியுள்ளது என்று நீரஜ் குற்றம் சாட்டினார். 2022-23-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 5,513 திட்டங்களை மத்திய அரசு முன்மொழிந்தது. ஆனால் எந்த திட்டமும் பீகாருக்கு கொண்டுவரப்படவில்லை மற்றும் மாநிலத்திற்கு எந்த மானியமும் வழங்கப்படவில்லை. எஸ்.சி பிரிவு மாணவர்களுக்கு என முன்மொழியப்பட்ட 42 விடுதிகளில், அவை எதுவும் பீகாருக்கு கொண்டுவரப்படவில்லை” என்றும் குற்றம் சாட்டினார்.
பா.ஜ.க மறுப்பு
முந்தைய BJRCY இன் கீழ், மாநிலத்தின் 100 சதவீத மத்திய அரசு உதவியுடன் எஸ்.சி பிரிவு பெண்களுக்கு என 100 இருக்கைகள் கொண்ட விடுதிகளும், 50 சதவீத மத்திய அரசு உதவியுடன் எஸ்.சி பிரிவு ஆண்களுக்கு விடுதிகளும் கட்டுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 2007-08 முதல் 2021-22 வரை அனுமதிக்கப்பட்ட 819 விடுதிகளில் 366 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
பீகார் முதலமைச்சரும், ஜே.டி.யு கட்சி தலைவருமான நிதிஷ் குமார், “மாநிலங்களும் பங்களிக்கும் மத்திய திட்டங்களுக்கு மோடி அரசு பெயர் வாங்க நினைப்பதால் மத்திய அரசு, அத்திட்டத்திற்கான முழு நிதியுதவியும் அளிக்க வேண்டும்” என்று மறைமுகமாக சாடினார்.
இந்தநிலையில் ஆளும் ஜே.டி.யு-வின் குற்றச்சாட்டை மாநில பா.ஜ.க மறுத்துள்ளது. பீகார் பாஜக செய்தித் தொடர்பாளர் சந்தோஷ் பதக் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு பீகார் பட்ஜெட்டில் 76% பங்களிக்கிறது. அதே நேரத்தில் பீகார் அரசாங்கம் 24% மட்டுமே பங்களிக்கிறது. மாநில அரசாங்கத்தில் கூட்டணி முரண்படுவதால் பீகாரில் ஒரு பெரிய கொள்கை முடக்கம் உள்ளது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“