பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரத்தில் விசாரணை வேண்டும் என்றும், நீண்ட நாள் அரசியல் போட்டியாளரான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறிய பாஜகவின் முக்கிய கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம், மாநில மற்றும் மத்திய அரசு அளவில் கருத்து ரீதியாக வேறுபடும் பிரச்சனைகளை குறித்து ஆராய தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க : பாஜகவின் வாக்கு வங்கியும் சாதிரீதியான கணக்கெடுப்பும் :
பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஒரு பிரதமருக்கு இருக்க வேண்டிய "அனைத்து குணங்களும்" இருப்பதாக தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் தேசிய செய்தித் தொடர்பாளருமான கேசி தியாகி, “அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சி காலத்தின் போது ஒருங்கிணைப்பு குழு இருந்தது. அதே போன்ற ஒரு குழுவை, நாங்கள் கருத்து ரீதியாக வேறுபடும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ய அமைத்தால் அதனை வரவேற்போம். கூட்டணி கட்சி சீராக செயல்பட இது நிச்சயம் உதவும். மேலும் தேவையற்ற கருத்துகள் வருவதை தடுக்கவும் இது உதவும்” என்றார்.
”பிரதம அமைச்சருக்கான வேட்பாளராக நிதீஷ் குமார் இல்லாவிட்டாலும் கூட, பிரதமர் ஆவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளது என்று நாங்கள் தேசிய கவுன்சிலின் போது தீர்மானம் நிறைவேற்றினோம்” என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
நிதீஷ் குமார் பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் குறித்து அங்காங்கே பேச்சுகள் அடிபட்டன. எங்களின் நோக்கங்களை வெளிப்படையாக வைத்திருக்க இதனை செய்தோம் என்று, இந்த தீர்மானத்திற்கான அவசியம் குறித்து கேள்வி எழுப்பிய போது கூறினார்.
தொடர்ந்து சாதி ரீதியான கணக்கெடுப்பை கட்சி வலியுறுத்தும் என்றும், நேர்மறையான முடிவுகள் பிரதமரிடம் இருந்து வரும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் கோரிக்கையைப் பற்றி கேட்டபோது, பாஜக தலைவரும் பீகார் துணை முதல்வருமான தர்கிஷோர் பிரசாத் பதிலளிப்பதில் எச்சரிக்கையாக இருந்தார். "நாங்கள் அதை ஆதரிக்கிறோம், ஏனெனில் இது பல்வேறு பிரச்சினைகளில் ஒருங்கிணைக்க எங்களுக்கு உதவும்," என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி அன்று, நிதீஷ் குமார் தலைமையில், சாதிரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 10 கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்தித்தார். இதற்கு முன்பு பெகாசஸ் ஸ்பைவேர் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
சாதிரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பை, குறிப்பாக உ.பி. தேர்தல்கள் நெருங்கி வருவதால் மிகவும் எச்சரிக்கையுடன் அணுகி வருகிறது பாஜக. கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர், சமீபத்திய ஆண்டுகளில் முக்கியமான ஆதரவு தளமாக மாறிய ஓபிசிக்களை எதிர்க்க முடியாது என்று கூறியுள்ளனர்.
இந்திய அரசு எஸ்சி மற்றும் எஸ்டி தவிர சாதி வாரியாக மக்கள் தொகையை கணக்கிடக் கூடாது என்று கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளது என்று ஜூலை 20ம் தேதி அன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமான பதிலளித்த உள்த்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil