பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூரில், ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தலைவர் மசூத் அசாரின் மைத்துனர்கள் ஹபீஸ் முகமது ஜமீல் மற்றும் முகமது யூசுப் அசார் உட்பட ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகங்களை குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் நிகழ்த்தப்பட்டது. "நுட்பமான தொழில்நுட்ப ஆயுதங்கள் மற்றும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெடிபொருட்களை" பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், இரண்டு வாரங்களுக்கு முன்பு பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டது.
தாக்குதல் நடத்தப்பட்ட ஒன்பது இடங்களில், ஐந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், நான்கு பாகிஸ்தானிலும் அமைந்திருந்தன. 2019 ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட்டில் ஒரு பயங்கரவாத முகாமைக் குறிவைத்ததில் இருந்து இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களின் பட்டியலும் தற்போது தெரிய வந்துள்ளது. லாகூருக்கு அருகே முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகமான மார்கஸ் தைபா, அங்கு 26/11 பயங்கரவாதி அஜ்மல் கசாப் மற்றும் லஷ்கர் உளவாளி டேவிட் கோல்மன் ஹெட்லி ஆகியோர் பயிற்சி பெற்றனர்; பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் மார்கஸ் சுப்ஹானல்லாஹ்; சியால்கோட்டில் உள்ள சர்ஜல்; சியால்கோட்டில் உள்ள மெஹ்மோனா ஜோயா; முசாஃபராபாத்தில் உள்ள சவாய் நாலா; முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால்; கோட்லியில் உள்ள குல்பூர்; கோட்லியில் உள்ள அப்பாஸ்; மற்றும் பிம்பர் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசு வட்டாரத்தின் படி, கொல்லப்பட்ட ஐந்து பயங்கரவாதிகள் விவரம்:
முதஸ்ஸர் காடியன் காஸ், என்ற முதஸ்ஸர், என்ற அபு ஜுண்டல்: லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய இவர், முரிட்கேயில் உள்ள மார்கஸ் தைபாவின் பொறுப்பாளராக இருந்ததாக கூறப்படுகிறது.
ஹபீஸ் முகமது ஜமீல்: ஜெய்ஷ்-இ-முகமதுடன் தொடர்புடைய இவர், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் மூத்த மைத்துனர். பஹவல்பூரில் உள்ள மார்கஸ் சுப்ஹான் அல்லாஹ்வின் பொறுப்பாளராக இவர் பொறுப்பு வகித்தார். இவர், ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு நிதி திரட்டுவதில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகமது யூசுப் அசார், என்ற உஸ்தாத் ஜி, என்ற முகமது சலீம், என்ற கோசி சாஹப்: ஜெய்ஷ்-இ-முகமதுடன் தொடர்புடைய இவரும், மசூத் அசாரின் மைத்துனர் என்று அறியப்படுகிறது. மேலும், இந்த பயங்கரவாத அமைப்பிற்கு இவர் ஆயுதப் பயிற்சி அளித்து வந்ததாக கூறப்படுகிறது. ஐசி-814 விமானக் கடத்தல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இவர், ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
காலித், என்ற அபு அகாஷா: லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய இவர், ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்துவதில் இவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
முகமது ஹசன் கான்: ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடைய இவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் செயல்பாட்டு தளபதியான முப்தி அஸ்கர் கான் காஷ்மீரியின் மகன். இவர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக கூறப்படுகிறது.