ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை ஜூனியர் நீதிபதிகள் விசாரித்தனர் : உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் பரபரப்பு புகார்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த அமர்வு, இளைய நீதிபதிகளை கொண்ட அமர்வு. இதற்கு அப்போதே நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாதது ஏற்கனவே சர்ச்சை ஆனது. தற்போது நீதிபதி  செல்லமேஸ்வர் இது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகே தீர்ப்பு கூறப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அகரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாதது ஏற்கனவே சர்ச்சை ஆனது. தற்போது உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான செல்லமேஸ்வர் இது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 மூத்த நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியது நினைவு கூறத்தக்கது. வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக அப்போது நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம் சாட்டினார்.

நீதிபதி செல்லமேஸ்வர், டெல்லியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்காக வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக நினைக்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து நீதிபதி செல்லமேஸ்வர் கூறியதாவது:

‘எனக்கும் அந்த சந்தேகம் உள்ளது. எதை வைத்து இதை நான் கூறுகிறேன் என்றால் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த அமர்வு, இளைய நீதிபதிகளை கொண்ட அமர்வு. இதற்கு அப்போதே நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அந்த அமர்வே விசாரித்தது. ஜெயலலிதா இறந்து ஒரு ஆண்டுக்கு பிறகே அந்த அமர்வு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு என்ன பயன் தரும்?

விசாரணைக்காக வழக்குகளை அமர்வுகளுக்கு ஒதுக்குவது குறித்த அதிகாரம் தலைமை நீதிபதிக்கு இருப்பதால், அவர் அந்த அதிகாரத்தை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். விருப்பத்தின் அடிப்படையில் வழக்குகள் ஒதுக்கப்பட்டால், அது நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை பாதிப்பதாக அமைந்து விடும்.

தலைமை நீதிபதி மீது பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது பற்றியும், பின்னர் கருத்து ஒற்றுமை ஏற்படாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது பற்றியும் நீதிபதி செல்லமேஸ்வரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், நமது நீதித்துறையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வது அவசியம் என்றும், நீதித்துறையில் எழுப்பப்படும் கேள்விகளுக்காகவும் பிரச்சினைகளுக்காகவும் கண்டன தீர்மானம் கொண்டு வருவது தீர்வாக அமையாது என்றும் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், வருகிற ஜூன் 22-ந் தேதி தான் ஓய்வுபெற இருப்பதாகவும், அதன்பிறகு அரசாங்கத்திடம் இருந்து எந்த பதவியையும் தான் எதிர்பார்க்கப்போவது இல்லை என்றும் கூறினார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close