மத்தியில் பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி வருகிற ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
2014 தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தோல்வியடைந்த நிலையில், இந்த முறை 50 இடங்களிள் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக சிராக் பஸ்வான் கூறினார்.
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அண்மையில், சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சரும் தனது தந்தையுமான ராம்விலாஸ் பஸ்வானிடமிருந்து கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, சிராக் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில், “லோக் ஜனசக்தி கட்சி 50 இடங்களில் மட்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது. கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்படும்”என்று தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளபடி, “லோக் ஜனசக்தி கட்சி தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்தது. இருப்பினும் லோக் ஜனசக்திக்கு தேர்தலில் அதிக இடங்களை வழங்க பாஜக தலைவர்கள் தயக்கம் காட்டியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், பீகாரில் லோக் ஜனசக்தியும் பாஜகவும் கூட்டணியில் உள்ளன.
இந்த நிலையில், திங்கள்கிழமை பாஜகவுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் அதன் கூட்டணி கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ) ஒருதலைப்பட்சமாக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் பலரை அறிவித்தது.
பீகாரில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஜார்க்கண்டில் தனியாக தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்), காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) ஆகியவை ஜார்க்கண்ட்டில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
ஜார்க்கண்ட் சட்டசபையில் உள்ள 81 இடங்களில் 31 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் ராஷ்டிரிய ஜனதா தளம் 7 இடங்களிலும் போட்டியிடும். அதே நேரத்தில் மற்றொரு கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அதிகபட்சமாக 43 இடங்களில் போட்டியிடுகிறது.