ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நேற்று (பிப்.28) மாலை ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது கலாஜாரியா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலில் திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது ரயிலில் இருந்த பயணிகள் சிலர் கீழே தண்டவாளத்தில் இறங்கி நின்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்த மற்றொரு ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 12 பயணிகள் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், ரயில்வே துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,"இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் நிகழ்ந்தது. வித்யாசாகர்-காசிதார் இடையே செல்லும் ரயில் எண் 12254-அங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் அவசர கால நிறுத்தத்திற்கான சங்கிலியை பயணிகள் இழுத்துள்ளனர். இதன் காரணமாக ரயில் அசன்சோல் பிரிவு என்ற இடத்தில் ரயில் இரவு 7 மணியளவில் நிறுத்தப்பட்டது. அப்போது பயணிகள் சிலர் தண்டவாளத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, அப்-லைனில் MEMU ரயில் வந்து கொண்டிருந்தது. இதை சற்றும் எதிர்பாராத நிலையில் எதிர் திசையில் வந்த ரயில் மோதியதில் பயணிகள் உயிரிழந்தனர்" என்று கூறினர். இருப்பினும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“