பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
Puducherry | Tamilisai Soundararajan: ஜார்க்கண்ட் மாநில உதயநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரியில் பயிலும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது ஜார்க்கண்ட் மாணவிகள் நடனமாடினர். அப்போது, ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனும் மாணவிகளுடன் இணைந்து நடனமாடி அங்கிருந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது:-
/indian-express-tamil/media/post_attachments/65ed1027-ddf.jpg)
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் நேரலை நிகழ்ச்சி மற்றும் ஜார்கண்ட் மாநில உதய நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி என ஜார்கண்ட் மாநிலம் சார்ந்த இரண்டு நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்று இருக்கிறேன். ரூ. 24 ஆயிரம் கோடி திட்டங்கள் பழங்குடியின மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட இருக்கிறது.
இன்று மகான் பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாள். நமக்கு கவுரவத்தை தந்த பழங்குடியின மக்களுக்கான கவுரவ தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. 'இது எங்களுடைய மண் வேறு யாரும் ஆக்கிரமிக்க முடியாது' என்று பிர்சா முண்டா கூறினார். முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவர்கள் முதன்மையானவராகவும் இருக்கிறார்.
பழங்குடியின மக்கள் விவசாயம் செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட போது அதற்காக போராடியவர் வெற்றி பெற்றவர் பிர்சா முண்டா. ஜார்க்கண்ட் மாநிலம் சுரங்கங்களின் இடமாகும் திகழ்கிறது. அந்த மண்ணைப் போலவே அங்கிருக்கும் மனிதர்களும் நல்ல மனப்பான்மை கொண்டவர்கள். இதுபோன்ற மாநில உதய நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்ற பாரதப் பிரதமருக்கும் மத்திய உள்துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உழைத்துக் கொண்டிருக்கும் ஜார்க்கண்ட் மாநில சகோதர-சகோதரிகளுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் இனிவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சந்தித்துக் கொள்வோம். நம் எல்லைகள், மொழிகள், கலாச்சாரங்கள் வித்தியாசமாக இருந்தாலும் இந்தியர்களாக ஒன்றிணைவதுதான் நம் நாட்டின் சிறப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“