”என்னை என்கவுண்டரில் கொல்ல திட்டம்”: வாட்ஸ் ஆப் வீடியோவால் ஜிக்னேஷ் அச்சம்

குஜராத் மாநில வட்கம் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, தன்னை போலீசார் என்கவுண்டரில் கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில வட்கம் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, தன்னை போலீசார் என்கவுண்டரில் கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், தன் உயிருக்கு ஆபத்து எனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள், காவல் துறை அதிகாரிகள அடங்கிய ‘ஏடிஆர் போலீஸ் அண்ட் மீடியா’ எனும் வாட்ஸ் ஆப் குரூப்பில் இரண்டு வீடியோக்கள் வெள்ளிக்கிழமை வைரலாகின. அதில், ஒரு வீடியோவில் அரசியல்வாதியைபோல் உடையணிந்த ஒருவரை போலீசார் கடுமையாக தாக்குகின்றனர். மற்றொன்றில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நேர்காணலில் அம்மாநில காவல் துறையால் நிகழ்த்தப்பட்ட எண்கவுண்டர் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அதன்பின், அகமதாபாத் உதவி எஸ்பி தோன்றி, “போலீசாரை வீடியோ எடுத்தாலோ, வாலாட்டினாலோ, இவருக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும்”, என தெரிவித்தார். அதன்பிறகு, அகமதாபாத் ஊரக எஸ்பி கட்டை விரலை உயர்த்திய எமோஜியும் இடம்பெற்றது.

தான் வேறொரு குரூப்புக்கு அனுப்ப வேண்டிய செய்தி, தவறாக இந்த குழுவுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக, அகமதாபாத் ஊரக எஸ்.பி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, ஜிக்னேஷ் மேவானி தன் ட்விட்டர் பக்கத்தில், “என்ன எப்படி என்கவுண்டரில் கொலை செய்வது என இந்த வீடியோவில் ஆலோசித்தனர். இதை உங்களால் நம்ப முடிகிறதா?”, என பதிவிட்டார்.

இதுகுறித்து டிஜிபி, உள்துறை அமைச்சர், தலைமை செயலாளரிடம் புகார் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

×Close
×Close