குஜராத் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க 156 இடங்களில் அமோக வெற்றி 7-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. கடந்த முறை 77 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் இம்முறை 17 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று இதுவரை இல்லாத மோசமான சரிவை கண்டுள்ளது. குஜராத் வட்கம் தொகுதியிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி,
தேர்தலின் போது கட்சி தன்னை போதுமான அளவு பயன்படுத்திக் கொள்ளவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
வட்கம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் மணிபாய் வகேலாவை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர்
ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார். குஜராத் காங்கிரஸின் செயல் தலைவரான மேவானி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “நான் இன்னும் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நான் உறுதியாக உணர்கிறேன். நான் என் வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு அல்ல, ஆனால் அதற்கு முன்பே பயன்படுத்தி இருக்கலாம். காங்கிரஸுக்கு என்னைப் போன்ற ஒரு முகம் இருக்கும் போது, மக்களின் மனதை புரிந்துகொள்பவர், நம்பகத்தன்மை கொண்டவர், பாஜகவை கடுமையாக எதிர்பவர், நல்ல ஆதரவாளர்களைக் கொண்டவர் இருக்கும்போது ஏன் மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்களில் பேச முடியவில்லை? பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் மக்கள், தலித்துகள் உற்சாகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.
உனா சம்பவம் – தலித் தலைவர்
உனா சம்பவத்தைத் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்ற ஒரு தலித் தலைவர் மற்றும் 2017இல் காங்கிரஸின் ஆதரவுடன் சுயேட்சையாக தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது மேவானி ஒரு ஆற்றல்மிக்க பிரச்சாரத்தை நடத்தினார். காங்கிரஸின் மற்றொரு இளம்,
கவர்ச்சியான தலைவர் கன்ஹையா குமார், ராஜ்யசபா எம்.பி இம்ரான் பிரதாப்காரியுடன் இணைந்து மேவானிக்கு பிரச்சாரம் செய்தனர்.
காங்கிரஸின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இடம்பெற்றாலும் மேவானி அதே மாவட்டத்தில் உள்ள சில வடக்கு குஜராத் தொகுதிகளிலும், அகமதாபாத்தின் வெஜல்பூர் தொகுதியிலும் மட்டுமே பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். இவற்றில் பெரும்பாலானவை அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர், அவர் தனது சொந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பாடு செய்யப்பட்டவை. பில்கிஸ் பானு வழக்கு மற்றும் கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதிற்கு எதிராக ஒவ்வொரு கூட்டத்திலும் பேசினார். கண்டனம் தெரிவித்தார்.
2021-ம் ஆண்டில், காங்கிரஸ் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேலும் கட்சி மீது இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். தற்போது மேவானியும் இதே கூறிய நிலையில், இருப்பினும் “நான் கட்சியைக் குறை கூற விரும்பவில்லை” என்று மேவானி தெரிவித்தார்.
நிதி பற்றாக்குறை
பாஜக அரசுக்கு எதிராக 2017-ம் ஆண்டு படிதார் சமூக ஒதுக்கீட்டு போராட்டத்தின் முகமாக இருந்த
ஹர்திக், மேவானியை காங்கிரசுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார். அதன் பின் பாஜகவில் இணைந்த ஹர்திக் இந்த தேர்தலில் வீராங்கம் தொகுதியில் போட்டியிட்டு 51,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜகவும் ஹர்திக்கை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் வைத்தாலும்., அவரையும் அதிகம் பயன்படுத்தவில்லை.
2017-ம் ஆண்டு மேவானி பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட வட்கம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். தற்போது பாஜக சார்பில் வட்கம்மில் போட்டியிட்ட மணிபாய் வகேலா, காங்கிரஸிலிருந்து விலகியவர். கடந்த 2017-ம் ஆண்டு மேவானிக்கு எதிராக வட்காமில் போட்டியிட வேண்டாம் என்று கட்சி வற்புறுத்தியதை அடுத்து, அவர் காங்கிரஸிலிருந்து விலகினார். இந்த தேர்தலில் 4,928 வாக்குகள் வித்தியாசத்தில் மேவானி வெற்றி பெற்றார்.
டெல்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ், குஜராத் தோல்விக்கு கட்சியின் அம்மாநில பிரிவு காரணம் என்று
குற்றம் சாட்டினார்.
புதிய உத்தி
இந்நிலையில் மேவானி கூறுகையில், “கட்சியில் நிதி பற்றாக்குறை உள்ளது. பாஜகவுடன் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அது ஒரு கட்சி அல்ல. ஒரு மாபெரும் கார்ப்பரேட் நிறுவனம். கூறினார், இது ஒரு முக்கியமான காரணி. நாட்டில் எந்த அரசியல் கட்சியும் நம்ப முடியாத அளவுக்கு பாஜகவிடம் பணம் இருக்கிறது என்று கூறினார். காங்கிரஸ் ஆழமாக தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும். நான் இந்தப் பதவிக்கு புதியவன். ஆனால் நாம் ஒன்றாக இணைந்து கட்சியை நடத்த வேண்டும். ஆற்றலுடனும் தொலைநோக்குடனும் புதிய உத்தி மற்றும் திட்டத்துடன் மக்களிடம் செல்ல வேண்டும். நாம் கிராம், நகரம் என அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும். வேறு வழியில்லை” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil