புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசு தன்னாட்சி நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு புதுவை மட்டுமின்றி, தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், ஜிப்மரில் 63 வகையான உயர் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்க நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது.
இதற்கு புதுவை அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பும் தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதோடு ஜிப்மரில் நோயாளிகளுக்கு மருந்துகள் தருவதில்லை, மத்திய அரசு ஜிப்மரை புறக்கணிக்கிறது, மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது என அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
இந்த நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குநர் மருத்துவர். ராகேஷ் அகர்வால், இன்று (மே 9) விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "ஜிப்மரில் மருந்துகள், டாக்டர்கள் பற்றாக்குறை என வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. கடந்த 5 ஆண்டில் ஜிப்மருக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு உயர்ந்துள்ளது. 2023-24ம் நிதியாண்டுக்கு ஜிப்மருக்கு ரூ.1,490 கோடியே 43 லட்சம் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
எய்ம்ஸ், சண்டிகர் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் நிதியை விட இது கூடுதல் நிதியாகும். மூலதன வசதிகளை உருவாக்க ரூ.300 கோடி, பொது செலவுகளுக்கு ரூ.355 கோடி, சம்பளத்துக்கு ரூ.835.43 கோடி ஒதுக்கப்பட்டுள்து. மூலதன வசதி மானியம் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.
மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் எந்த குறைப்பும் செய்யவில்லை, நிதி பற்றாக்குறையும் ஏற்படவில்லை. கொரோனா தாக்கம் இருந்த நிலையிலும் ஜிப்மரில் நோயாளிகளின் வசதிக்காக டிஜிட்டல் ஆஞ்சியோகிராபி, புதிய லீனியர், கிருமிநீக்க துறை நவீனமயம், அல்ட்ரா சவுண்ட், ஹிமாட்டலஜி அனலைசர், உட்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பைபிளேன் டிஜிட்டல் ஆஞ்சியோகிராபி கருவி புதுவையில் வேறு எங்கும் இல்லை. புற்று நோயாளிகளுக்காக லீனியர் ஆக்சிலரேட்டர் தொடங்கப்பட்டுள்ளது. கருவின் வளர்ச்சி குறைபாடை ஸ்கேன் செய்ய 4டி அல்ட்ராசவுண்ட் கருவி நிறுவப்பட்டுள்ளது. லேசர் அறுவை சிகிச்சையை கண் மருத்துவத்துறை பெற்றுள்ளது.
ஜிப்மர் ஒட்டுமொத்த செயல்பாடை மேம்படுத்த பல துறைகளிலும் புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. சலவைக்கு 120 கிலோ தானியங்கி சலவை எந்திரங்கள் 3 நிறுவப்பட்டுள்ளது. ஆபரேஷன் தியேட்டர்களில் நவீன விளக்குகள், மயக்கமருந்து பணி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. ஆய்வக சேவை மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் நெரிசலை குறைக்க புதிய வார்டு 16ம் எண் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 4 தீவிர சிகிச்சை உட்பட 30 படுக்கைகள் உள்ளன. பிரதமர், மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப காகித மருந்து சீட்டுகள் தவிர்க்கப்பட்டு மின் சீட்டுகள் வழங்கப்படுகிறது. நோயாளிகளின் உதவியாளர்களுக்கு காத்திருப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
510 உதவியாளர்கள் இரவில் தங்க இடம் வழங்கப்பட்டுள்ளது. ஜிப்மரில் மொபைல் சிக்னல் பூஸ்டர்கள் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த நிறுவப்பட்டுள்ளது. ஜிப்மரில் 786 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இதில் 252 டாக்டர்கள், 431 செவிலியர்கள், 50-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுர்கள் அடங்குவர். 10 ஆண்டுக்கு பிறகு ஜிப்மரில் புதிய பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி 70 முதுநிலை டாக்டர்கள், 550 செவிலியர்கள் தேர்வு செய்யும் நடைமுறைகள் நிறைவு பெற்றுள்ளன.
இவர்கள் இன்னும் 2 மாதத்தில் ஜிப்மரில் பணியில் சேர உள்ளனர். இதன்பின் நோயாளிகளுக்கான சேவை மேலும் விரிவடையும். ஏழை நோயாளிகள் நலனுக்காக பல்வேறு அரசு திட்டங்களிலும் ஜிப்மர் உறுதியான பங்களிப்பை தருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்ட விதிகளின்படி முழு வசதிகள் வழங்கப்படுகிறது.
வெளிப்புற நோயாளிகளுக்கும் தொடர்ந்து இலவச மருந்துகள் வழங்கப்படுகிறது. தற்போதுள்ள சேவைகளுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான இலவச மருந்தகம் தவிர, அம்ரித் மருந்தகம், 24மணி நேர தனியார் மருந்தகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவை மலிவு விலையில் நோயகளிகளுக்கு மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகளை வழங்குகின்றன.
ஜிப்மர் வளாகத்தில் மக்கள் மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜிப்மர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. காரைக்காலிலும் ஜிப்மர் சேவை வழங்கி வருகிறது. காரைக்காலில் புதிய வளாகம் கட்டப்பட்டு வருகிறது. மாணவர் விடுதிகள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரி கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது. 500 படுக்கை கொண்ட மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்களில் செயல்பட தொடங்கும்.எனவே எப்போதும் போல புதுவை, சுற்றியுள்ள மக்களுக்கும், நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஜிப்மர் உறுதியாக உள்ளது.
இன்னும் பல உயரங்களை எட்ட முழு சக்தியுடன் ஜிப்மர் செயல்பட்டு வருகிறது. ஜிப்மர் பற்றி வெளியாகும் அனைத்து வதந்திகள், தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜிப்மர் நிர்வாகம் விரும்புகிறது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.