புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. ஜிப்மரில் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் சிசிச்சைகாக இங்கு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் 16-ம் தேதி ஜிப்மரில் வழங்கப்படும் 63 வகையான உயர் சிகிச்சைகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை வெளியானது.
இதற்கு புதுவை அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தின. மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தப்பட்டதற்கு ஆளுநர் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஏழைகளுக்கு இலவச சிகிச்சை ஜிப்மரில் தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், கடந்த 16.3.23-ம் தேதி வெளியிடப்பட்ட சேவை கட்டண சுற்றறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பா.ஜ.க எம்.எல்.ஏ அசோக்பாபு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுவை ஜிப்மர் மருத்துவமனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் புதுவை, தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்கள் பல நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏழை மக்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு அனைத்து துறைகளையும் நவீனப்படுத்தி சிறப்பான சேவையாற்றி வருகிறது.
நேரில் சென்று கோரிக்கை
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மத்திய அரசுக்கு தெரிவிக்காமல், ஜிப்மர் இயக்குனர் சேவை கட்டணங்களை அமல்படுத்தினார். இதனால் ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நானும், பாஜக மாநில செயலாளர் ரத்தினவேல், விவசாய அணி தலைவர் புகழேந்தி ஆகியோர், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், மாநில தலைவர் சாமிநாதன் ஒப்புதலோடு டெல்லிக்கு சென்றோம்.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை சந்தித்து மேற்படி ஜிப்மரின் சேவை கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் சேவை கட்டணங்களை ரத்து செய்ய துறையின் செயலரை அழைத்து உத்தரவு பிறப்பித்தார். இதன்படி ஜிப்மரில் அமல்படுத்தப்பட்ட சேவை கட்டணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கையை ஏற்று சேவை கட்டணங்களை ரத்து செய்ய ஆணை பிறப்பித்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவிற்கு புதுவை மாநில பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுவை மக்கள் மீதும், தமிழ் மக்கள் மீதும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதை காட்டுகிறது. ஜிப்மருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு அளிக்கும். ஜிப்மரில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி பாஜக சார்பில் உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“