2014-15ல் 47.15 கோடியாக இருந்த வேலை வாய்ப்பு 2023-24ல் 36 சதவீதம் அதிகரித்து 64.33 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்றும் மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Jobs increased by 36% in Modi years to 64.33 crore, says labour minister Mansukh Mandaviya
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (UPA) கீழ் வேலை வாய்ப்பு வெறும் 7 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது என்று கூறினார்.
2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் 2.9 கோடி கூடுதல் வேலைகள் உருவாக்கப்பட்டதாகவும், அதேநேரம் 2014-24 க்கு இடையில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் 17.19 கோடி வேலைகள் சேர்க்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த ஓராண்டில் (2023-24) மட்டும் மோடி அரசு நாட்டில் 4.6 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான அழுத்தத்தின் பின்னணியில் இந்த தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் விவசாய வேலைகள் வீழ்ச்சியடைந்தன.
விவசாயத் துறையைப் பற்றி அமைச்சர் கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2014 வரை 16 சதவீதம் வேலைகள் குறைந்தது என்றும், மோடி ஆட்சியில் 2014 - 2023 வரை 19 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
இதேபோல், உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெறும் 6 சதவீதமாக வளர்ந்தது, மோடி ஆட்சியில் 2014-2023 க்கு இடையில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் சேவைத் துறையில் வேலைவாய்ப்பு 25 சதவீதமும், மோடி ஆட்சியில் 2014 - 2023 வரை 36 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2017-18ல் 6 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் (UR) 2023-24ல் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது, அதே நேரத்தில் வேலைவாய்ப்பு விகிதம் (WPR, தொழிலாளர் மக்கள் தொகை விகிதம்) 2017-18ல் 46.8 சதவீதத்தில் இருந்து 2023-24 இல் 58.2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இதேபோல், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) 2017-18 இல் 49.8 சதவீதத்திலிருந்து 2023-24 இல் 60.1 சதவீதமாக வளர்ந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
முறையான வேலை சந்தையில் சேரும் இளைஞர்களின் வளர்ச்சி குறித்து அமைச்சர், கடந்த ஏழு ஆண்டுகளில் (செப்டம்பர் 2017 முதல் செப்டம்பர் 2024 வரை) 4.7 கோடி இளைஞர்கள் (வயது 18-28 வயது) ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) சேர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“