பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீதான தாக்குதல் தொடர்பாக மம்தா பானர்ஜி அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் வெள்ளிக்கிழமை மேலும் அதிகரித்தது. உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து விவாதிக்க தலைமைச் செயலாளரையும், காவல்துறைத் தலைவரையும் அழைத்துள்ளது.
மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் அம்மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து வெள்ளிக்கிழமை காலை மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் இவர்கள் இருவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
திங்கள்கிழமை நடைபெரும் மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த கூட்டத்திற்கு டெல்லியின் நார்த் பிளாக்கிற்கு வருமாறு மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளரிடமும் டிஜிபியிடமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
“ஆளுநர் தனது அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீதான தாக்குதல் பற்றிய விவரங்கள் மற்றும் அவர் வருகையின்போது பாதுகாப்புத் தேவைகள் குறித்து தலைமைச் செயலாளரும் டி.ஜி.பியும் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தாலும் அது எவ்வாறு வெளிப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றிய ஒரு மோசமான சித்திரத்தை வரைந்துள்ளது. இந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.” என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், உள்துறை செயலாளர் அஜய் பல்லா வியாழக்கிழமை எழுதிய கடிதத்திற்கு அவர்கள் பதிலளிக்காததால் அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.
வியாழக்கிழமை கொல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பருக்குச் சென்று கொண்டிருந்தபோது ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் மற்றும் செங்கற்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா மற்றும் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட பலரின் கார்கள் சேதமடைந்தன. விஜய்வர்கியா, முகுல் ராய் உட்பட சுமார் 10 பாஜக தலைவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த தாக்குதல் குறித்து மேற்குவங்க மாநில அரசிடம் அறிக்கை கோரியது. மேலும், அது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மேற்கு வங்க ஆளுநரிடமிருந்து அறிக்கை கோரியது.
மம்தா பானர்ஜியை சாடிய ஆளுநர்
இதனிடையே, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நட்டாவின் பாதுகாப்பு வாகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டினார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கவலை தெரிவித்த ஆளுநர் தங்கர், “முதல்வர் அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும். அவர் அதன் வழியில் இருந்து விலக முடியாது. நீண்ட காலமாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. நேற்று நடந்த சம்பவங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை. அவை நம்முடைய ஜனநாயக ஜனநாயக போர்வையின் மீது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் ஜே.பி.நட்டாவை கேலி செய்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் கேட்டுள்ளார்.
நட்டாவின் வருகை மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்து மம்தா பானர்ஜி கருத்து தெரிவிக்கும் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ள அவர், “வங்காளத்தின் செழுமையான கலாச்சாரத்தின் சாராம்சத்தையும், விழுமியத்தையும் மீறுகிறது. அவருடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தங்கர் கேட்டுக் கொண்டார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.