பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜே.பி.நட்டாவுக்கு கோவிட்19 அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின் பேரில் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஜே.பி.நட்டா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவர் தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் தகவலை அறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலம் பெற வாழ்த்துகிறேன். இந்த நேரத்தில் எனது பிரார்த்தனைகள் நட்டாவுடனும், அவரது குடும்பத்தினருடனும் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை ஜே.பிநட்டா மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றிருந்தபோது அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் மத்திய அரசுக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு அழைத்து உத்தரவிட்டது. ஆனால், மேற்கு வங்க மாநில அரசு அவர்களை அனுப்பப் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், மத்திய அரசுக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையே மேலும் ஒரு புதிய மோதல் புள்ளி உருவாகியுள்ளது.
இந்த சூழலில்தான், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil