அருண் ஜனார்த்தனன், இந்தியன் எக்ஸ்பிரஸ்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசு தலைவரை வலியுறுத்த வேண்டும் என, அந்த வழக்கில் தண்டனை அறிவித்த நீதிபதிகளுள் ஒருவரான ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு, சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், 1999-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் உட்பட 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனையும், மற்ற மூவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. பின்னாளில் அனைவரது தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால், இதை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தீர்ப்பு வழங்கிய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கோபால் கோட்சே மத்திய அரசு விடுவித்ததை அக்கடிதத்தில் கே.டி.தாமஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து, சோனியா காந்திக்கு கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி கே.டி.தாமஸ் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்களை விடுவிக்க நீங்களும் (சோனியாகாந்தி), ராகுல்காந்தியும் இசைவு தெரிவித்தால் அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். ஏற்கனவே அவர்கள் நீண்ட காலத்தை சிறையில் கழித்துவிட்டனர். இதில், நீங்கள் மட்டுமே உதவிசெய்ய முடியும். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகளுள் ஒருவன் என்ற முறையில் அவர்களுக்கு கருணை காட்டுவீர்கள் என இந்த கடிதம் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்”, என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இக்கடிதடம் குறித்து நீதிபதி கே.டி.தாமஸை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது. அப்போது, இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது அனைத்தும் உண்மைதான் என அவர் ஒப்புக்கொண்டார். மேலும், இவ்வழக்கில் சிறையிலுள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் எனவும், சிபிஐ விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, தண்டனை பெற்றுவருபவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.40 லட்சம் குறித்த தகவல்களை சிபிஐ தெரிவிக்கவில்லை எனவும், அதனால், இந்த விசாரணை இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் மன்னிக்க முடியாத குறை எனவும் அவர் கூறினார்.
மேலும், அவர் பேசுகையில், “இந்திய சாட்சிய சட்டத்தின்படி ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாக மட்டுமே கொள்ளமுடியும் என வாதாடினேன். ஆனால், என்னுடன் இருந்த மற்ற இரு நீதிபதிகள், ஒப்புதல் வாக்குமூலத்தை நிலையான ஆதாரமாக கொள்ள வேண்டும் என வாதாடினர். அதனால், இருவரிடமும் நான் என் வீட்டில் நீண்ட விவாதத்தை நடத்தினேன். ஆனால், அவர்களுடைய கருத்து பெரும்பான்மையாக இருந்ததால், அவர்கள் வழியில் செல்ல நேர்ந்தது”, என தெரிவித்தார்.
“முக்கிய குற்றவாளிகள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். அந்த சமயத்தில் அரசு வழக்குரைஞராக இருந்த அல்டஃப் அஹ்மதுவிடம், கைப்பற்றப்பட்ட பணம் ரூ.40 லட்சம் குறித்து கேள்வி எழுப்பினேன். அந்த சமயத்தில் இவ்வளவு பணம் வைத்திருப்பது, கைதானவர்கள் பொருளாதார ரீதியாக அதிகாரமிக்கவர்களாக இருக்க வேண்டும். அவரிடம் இந்த பணத்தின் மூலம் குறித்து விசாரணை நடத்தினீர்களா என கேட்டேன். பெரும் கலந்துரையாடலுக்கு பின், அப்போதிய சிபிஐ விசாரணை அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன், இதுகுறித்து விளக்கமளிக்க கால அவகாசம் கேட்டார். அதற்கடுத்த நாளே, விசாரணையில் அந்த பணத்தின் மூலம் குறித்து கண்டுபிடிக்கப்படவில்லை என அஹமது கூறினார்”, எனவும் கே.டி.தாமஸ் தெரிவித்தார்.
“விசாரணையின் இந்த குறைபாடுகளால் நான் உளைச்சலுக்கு ஆளானேன். இதுகுறித்து மற்ற நீதிபதிகளிடம் கலந்தாலோசித்தேன். அவர்கள் சிபிஐ-ன் உழைப்பை கருத்தில்கொண்டு இறுதி உத்தரவில் சிபிஐயை விமர்சிக்கக்கூடாது என தெரிவித்தனர். அதற்கு நான் ஒரு நிபந்தனையை தெரிவித்தேன்: சிபிஐயை இறுதி உத்தரவில் விமர்சிக்கவும் கூடாது, பாராட்டவும் கூடாது என. அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்டபோது, நீதிபதி டி.பி.வாத்வா, சிபிஐ அதிகாரி கார்த்திகேயனை மனதார பாராட்டியது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அது தலைப்பு செய்தியானது. அதாவது, சிபிஐ விசாரணையில் உச்சநீதிமன்றம் மகிழ்ச்சி அடைந்ததாக அந்த செய்திகள் அர்த்தம் கற்பித்தன”, எனவும் கூறுகிறார் கே.டி.தாமஸ்.
“நான் மூத்த நீதிபதியாக இருந்ததால், எனக்கு பிறகே டி.பி.வாத்வா தீர்ப்பை வாசித்தார். அவர் கூறுவது எனக்கு முன்பே தெரிந்திருந்தால், என்னுடைய தரப்பை நான் எனக்கேற்ப மாற்றி எழுதியிருப்பேன்”, என தாமஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் இருக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி வாத்வாவை தொலைபேசி மூலமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்புகொண்டது. ஆனால், கே.டி.தாமஸ் கூறுவது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
அதன்பிறகு இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட 19 பேரில் ஒருவர் வாரப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி குறித்து தெரிவித்த தாமஸ், “அவர் அந்த பத்திரிக்கையில் ரூ.40 லட்சத்தை தந்தது சந்திரசுவாமிதான் என தெரிவித்துள்ளார். ஆனால், அதுபற்றி ஏதும் பேசக்கூடாது என அதிகாரி ஒருவர் எச்சரித்திருக்கிறார். இந்த வழக்கில் சந்திரசுவாமியின் தாக்கம் குறித்து விசாரிக்கப்படாதது இந்திய குற்றவியல் அமைப்பின் தோல்வி என நான் தீர்க்கமாக நம்புகிறேன். “சந்திர சுவாமி மே 23, 2017-ஆம் ஆண்டு இறந்துவிட்டார்). இது இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் மன்னிக்க முடியாத குறை”, என தெரிவித்தார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த வழக்கில் இரட்டை தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறித்தும், ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை தூக்கில் போடுவது குறித்தும் கே.டி.தாமஸ் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: நந்தினி வெள்ளைச்சாமி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.