Justice AK Sikri : முன்னாள் சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர்களாக பணியாற்றிய அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா தங்களுக்குள் மாறி மாறி புகார்கள் அளிக்க, அந்த விவகாரம் பிரதமர் அலுவலகம் வரை சென்றது.
பின்னர் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்புவதாக அறிவிப்பு வெளியானதோடு, புதிய சி.பி.ஐ இயக்குநராக இடைக்காலத்தில் செயல்படுவார் என நாகேஷ்வர ராவ் என்பவரை புதிய இயக்குநராக அறிவித்தனர்.
கட்டாய விடுப்பினை ஏற்க இயலாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார் அலோக் வர்மா. மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் எதன் அடிப்படையில் இவர் மீது நடவடிக்கை மேற்கொண்டது என அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டாய விடுப்பு உத்தரவு செல்லாது என்று கூறி, அலோக் வர்மாவிற்கு மீண்டும் பொறுப்புகளை வழங்கியது. ஆனால் அலோக் வர்மா குறித்த இறுதி முடிவுகளை பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழு அறிவிக்கும் என்றும் அந்த தீர்ப்பில் கூறியிருந்தது.
Justice AK Sikri pulls out of interim CBI chief’s case after CJI Gogoi
அந்த உயர்மட்டக் குழுவில் பிரதமர், காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜூன கார்கே, மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர்கள் இருந்தனர். அவர்கள், அலோக் வர்மாவை தீயணைப்புத் துறைக்கு மாற்றினர். இந்த பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இடைக்கால சி.பி.ஐ இயக்குநராக நாகேஷ்வர ராவை மீண்டும் பொறுப்பில் அமர்த்தியது மத்திய அரசு. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் பொதுநல மனு தாக்கல் செய்தார். திங்களன்று (21ம் தேதி) விசாரணைக்கு வந்த இந்த வழக்கினை விசாரிக்க இயலாது என்று மறுத்துவிட்டார் தலைமை நீதிபதி.
புதிய சி.பி.ஐ இயக்குநரை தேர்வு செய்யும் பொறுப்பில் இருப்பதால் தன்னால் முடியாது என்று அவர் மறுத்துவிட, ஏ.கே.சிக்ரி முன் மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமர் இல்லத்தில் அலோக் வர்மா விவகாரம் தொடர்பாக நடைபெற்ற உயர்மட்டக் குழுவில் இடம் பெற்றிருந்தார் ஏ.கே. சிக்ரி. அதனால் இந்த வழக்கினை தன்னால் விசாரிக்க இயலாது என்று இந்த வழக்கில் இருந்து விலகினார்.
இந்த வழக்கு, புதிய அமர்வில் வரும் வெள்ளியன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று புதிய சி.பி.ஐ இயக்குநரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது பிரதமர் அலுவலகம்.
மேலும் படிக்க : சிபிஐயின் இறையாண்மையை காக்கவே நான் முயன்றேன் - அலோக் வர்மா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.