ஒருவார காலம் அரச முறை பயணமாக கனடாபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடும்பத்துடன் நேற்று (சனிக்கிழமை) இந்திய வந்தடைந்தார். அவருடன் மனைவி சோஃபி ட்ரூடோ, மகள் எல்லா கிரேஸ், மகன்கள் சேவியர் மற்றும் ஹேட்ரியன் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
முதன்முறையாக இந்தியா வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ, இந்த பயணத்தில் இந்தியா-கனடா இருநாட்டு உறவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளார்.
ஜஸ்டினின் மூன்று வயது மகன் ஹேட்ரியன் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளான். டெல்லி வந்திறங்கியவுடன், தன் தந்தையை வரவேற்கும்போது வழங்கப்பட்ட பூங்கொத்தை ஹேட்ரியன் அன்புடன் பிடித்துக்கொண்டான்.
முதலாவதாக ஜஸ்டின் ட்ரூடோ தாஜ்மஹாலுக்கு சென்றார்.
“என் குடும்பத்தினருடன் இந்தியா வந்திருப்பதை சிறப்பான தருணமாக உணர்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தை ஒரு தந்தையாக என் குழந்தைகளுடன் கழிப்பது சிறந்ததொரு அனுபவமாக நினைக்கிறேன்”, என ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
இந்த பயணத்தில் பல்வேறு தலைவர்கள், தொழிலதிபர்களை ஜஸ்டின் ட்ரூடோ சந்திக்க உள்ளார். அவரது மனைவி சோஃபி முன்னாள் ஊடகவியலாளர் ஆவார். அவர் நியூட்ரிஷன் இண்டர்நேஷனல் எனப்படும், கனட என்.ஜி.ஓ. அமைப்பினரை சந்திக்க உள்ளார். இந்த அமைப்பு இந்தியா உள்ளிட்ட ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து செயலாற்றி வருகிறது.