கர்நாடகாவில் காலா ரிலீஸ்: தனுஷூக்கு உயர்நீதிமன்ற முக்கிய உத்தரவு!

காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட்டே ஆக வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது

`காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது.

பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் காலா திரைப்படம் வரும் ஜீன் 7 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் எவரும் எதிர்ப்பார்க்காத நிலையில் காலா படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு குரல்கள் ஒலித்தன,

காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து கூறி விட்டார். எனவே, அவரின் காலா படத்தை இங்கு திரையிட மாட்டோம். மீறி திரையிட்டால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்று சில கன்னட அமைப்பினர் மிரட்டல் விடுத்தனர். அதன் பின்பு, கன்னட திரைப்பட வர்த்தக சபையும் கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் படத்தை எப்படியாவது கர்நாடகாவில் திரையிட படக்குழு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. இரண்டு நாட்களாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் பலன் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் தான் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இதில், கர்நாடகாவில் காலாவைத் தடையில்லாமல் வெளியிட வேண்டும் என்றும் படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் தனுஷ் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று(5.6.18) மதியம் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட்டே ஆக வேண்டும் என யாரையும் வற்புறுத்த முடியாது என்றும், அதேசமயம், படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கூடவே, தயாரிப்பாளர் தனுஷ் கர்நாடகாவில் எந்தெந்த தியேட்டர்களில் காலா வெளியாகிறது என்ற விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

×Close
×Close