இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜசேகர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் ஏற்கனவே தொடர்ந்துள்ள வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவில் படத்தின் தலைப்பும், கதையும் தன்னுடையது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே காலா படம் வெளியாகக் கூடாது, அப்படி வெளியானால் தன்னுடைய வாழ்க்கை பாதிக்கும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், மனுவை ஏற்க போதிய ஆதாரங்கள் இல்லையென்பதால் ராஜசேகர் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், “உலகம் முழுவதும் காலா வெளியாகும் நிலையில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் எதற்காகத் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வியையும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஷோக் பூஷன் மற்றும் ஏ.கே. கோயல் கேட்டனர்.
மேலும் இந்த வழக்கை வரும் 7ம் தேதிக்குள் பட்டியலிட முடியாது என்றும், இந்த மனு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா. இரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் தென்னிந்திய சினிமா வர்த்தக சபை வரும் ஜூன் 14ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவளிக்கப்பட்டுள்ளது.