நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாவதற்குக் கர்நாடக சினிமா வர்த்தகத்துறை தடை விதித்திருந்தது. எனினும் இந்தத் தடைகளை மீறி நாளை முதல் கர்நாடகத்திலும் காலா திரையிடப்பட உள்ளது.
காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, தமிழகத்திற்குச் சாதகமான கருத்துக்களை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த். இவரின் இந்தக் கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பிறப்பால் கர்நாடகத்தை சேர்ந்த ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு எவ்வாறு சாதகமாக பேசலாம் என்ற கேள்விகளும் எழுந்தது. இதைத் தொடர்ந்து ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு கூறி, அவர் நடித்த ‘காலா’ திரைப்படத்தைத் திரையிட தடை விதித்தது கர்நாடக சினிமா வர்த்தகத்துறை.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ‘இந்தப் படத்திற்காக உழைத்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு கர்நாடக திரைப்படத்துறைக்கு உள்ளது. காவிரிக்காகக் காலா தடை செய்யக்கூடாது.’ என்று கூறினார்.
இதையடுத்து இன்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விநியோகஸ்தர் கனகபுரா சீனிவாஸ், காலா திரைப்படத்தின் வெளியீடு உரிமையை வாங்கியுள்ளார். இதன் மூலம் அம்மாநிலத்தில் உள்ள மொத்தம் 130 தியேட்டர்களில் காலா வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 130 திரையரங்குகளுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.