புதுச்சேரி கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா. இவர் மூன்று நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் சிலவற்றையும், பல்வேறு ஆபாச படங்கள் மற்றும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் மூலமாக தனக்கும், தனது உறவினர்களுக்கும் அனுப்பியதாக புகார் அளித்துள்ளார். மேலும், தன்னை சொல்லும் இடத்திற்கு தனிமையில் வர வேண்டுமென மிரட்டியதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, மிரட்டியவரின் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் எண் எந்த ஊரில் இருந்து உபயோகப்படுத்துகிறது என்பதை கண்டறிந்தனர் புதுச்சேரி இணையவழி போலீசார். மேலும் அது எந்த செல்போன் மூலமாக செயல்படுவது என்பதையும் கண்டுபிடித்தனர். அந்த நபரை திண்டிவனம் அருகே சென்று கைது செய்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில், மிரட்டியவர் அந்த பெண்ணின் இரண்டாவது கணவர் என்றும் அவருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. காஞ்சனா தங்கள் குடும்பத்தினரிடம் சொல்லி அவரை பிரிந்து தனியாக வந்துள்ளார். மேலும் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், தன்னுடன் சேர்ந்து வாழ வில்லை என்றால், அந்தப் பெண்ணை அசிங்கப்படுத்தி விடுவதாகவும், புகைப்படங்களை எல்லாம் காஞ்சனாவுக்கும்,அவர்களுடைய உறவினர்களுக்கும் அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்ணினுடைய தனிப்பட்ட புகைப்படங்களை அந்த பெண்ணிற்கும் மற்றும் உறவினர்களுக்கு எல்லாம் அனுப்பிய காரணத்தினால் இணைய வழி சட்டத்தின்படி, அந்த நபரை காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையிலான போலீசார் அந்த நபரை திண்டிவனம் அருகில் வைத்து கைது செய்து அவரிடம் இருந்து ஆபாச புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்திய செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை இன்று நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்
இது பற்றி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கரன் பேசுகையில், "பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட புகைப்படங்களை எடுப்பது மற்றவர்களுடன் பகிர்வதால் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள். அந்த புகைப்படங்களை வீடியோக்களை வைத்துக்கொண்டு மிரட்டப்படுகிறார்கள். தனிப்பட்ட புகைப்படங்களை எடுக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் கவனத்துடனும் பெண்கள் செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“