காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவரும், முன்னாள் ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவருமான கன்யா குமார், எம்.பி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
குஜராத்தின் தலித் தலைவரும் சுயேச்சை எம்எல்ஏவுமான ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை வழங்கினார். ஆனால் “தொழில்நுட்ப காரணத்தால்” கட்சியில் முறையாக சேர முடியவில்லை என கூறினார்.
இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ” தொழில்நுட்ப காரணங்களால் என்னால் காங்கிரஸ் கட்சியில் முறையாக சேர முடியவில்லை. நான் ஒரு சுயேச்சை எம்எல்ஏ. ஏதேனும் கட்சியில் சேர்ந்தால், என்னால் எம்எல்ஏவாக தொடர முடியாது. காங்கிரஸ் கட்சியில் கொள்கை ரீதியாக சேர்ந்துள்ளேன். வரவிருக்கும் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட உள்ளேன்” என தெரிவித்தார்.
முன்னதாக , டெல்லியில் உள்ள ஷஹீத்-இ-ஆஸம் பகத் சிங் பூங்காவில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்யா குமார் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகிய இருவரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है… pic.twitter.com/v6ySv3Zcjp
— Congress (@INCIndia) September 28, 2021
காங்கிரஸில் கட்சியில் இணைந்தது குறித்து பேசிய கன்யா குமார், ” நான் காங்கிரஸ் கட்சியில் சேருகிறேன். ஏனெனில் அது கட்சி அல்ல ஒரு கருத்தாக்கம். நாட்டின் பழமையான மிகவும் ஜனநாயக பூர்வமான கட்சியாக அது உள்ளது. ஜனநாயகம் என்பதை மேற்கோள் காட்டி கூறுகிறேன். காங்கிரஸ் கட்சி இல்லாமல் நாடு உயிர்ப்போடு இருக்காது. இது என்னுடைய கருத்து மட்டும் அல்ல பெரும்பான்மையானோரின் கருத்தும் இதுதான்” என்றார்.
தலித் சமூகத்தை சேர்ந்த மேவானி(41), குஜராத் வட்கம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஹர்திக் மற்றும் அல்பேஷ் தாகூர் ஆகியோருடன் இணைந்து இளம் கூட்டணியாக கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கோட்டையான குஜராத்தில் தனித்து நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல, 34 வயதான கன்யா, மோடி அரசுக்கு எதிரான உரைகளால் தேசிய கவனத்தை ஈர்த்த முன்னாள் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் ஆவார். பின்னர் சிபிஐ வேட்பாளராகக் களமிறங்கித் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
Shri @RahulGandhi with Shri #KanhaiyaKumar and Gujarat MLA Shri @jigneshmevani80 at Shaheed-E-Azam Bhagat Singh Park, ITO, Delhi. pic.twitter.com/POlyraX8Wo
— Congress (@INCIndia) September 28, 2021
காங்கிரஸின் வட்டாரங்களின் கூற்றுப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி மற்றும் லலிதேஷ்பதி திரிபாதி போன்ற பல இளம் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில், கன்யா, மேவானி வருகை நிச்சயம் காங்கிரஸூக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புவதாக தெரிவிக்கின்றனர்.