Advertisment

கனிமொழி பேட்டி-2 : காவிரி, நீட் பிரச்னைகளில் கமல்ஹாசன் நிலை என்ன?

காவிரி, நீட் உள்ளிட்ட பிரச்னைகளில் நிலையை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அது தெரியாமல், நான் கருத்து கூறுவது (கமல்ஹாசன் பற்றி) சரியாக இருக்காது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

இந்தியன் எக்ஸ்பிரஸ் டெல்லி அலுவலகத்தில், ‘ஐடியா எக்சேஞ்ச்’ நிகழ்வில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அளித்த பேட்டியின் இரண்டாம் பகுதி இது...

Advertisment

அம்ரித் லால் : அதிமுக-வின் குழப்பங்களை திமுக சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற பேச்சு பலமாக இருக்கிறது. போதிய எம்.எல்.ஏ.க்கள் உங்களிடம் இருப்பதால், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலமாக இந்த அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாமே?

பதில்: திமுக ஏதாவது செய்திருக்க வேண்டும் என ஒவ்வொருவரும் கூறுகிறார்கள். திமுக அப்படி என்ன செய்திருக்க வேண்டும் என நான் உண்மையிலேயே அறிந்துகொள்ள விரும்புகிறேன். கட்சித் தாவல் தடை சட்டங்கள் இருக்கின்றன. இந்த ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்திற்கு வர நாங்கள் விரும்பவில்லை. அதில் எங்களது செயல் தலைவர் மிகத் தெளிவாக இருக்கிறார்.

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி எங்கள் பக்கம் கொண்டு வந்து, அதன் மூலமாக ஆட்சியைக் கவிழ்க்கும் குதிரை பேரத்தை நாங்கள் நடத்த விரும்பவில்லை. இந்த விஷயத்தில் தெளிவான நிலைப்பாடை திமுக எடுத்திருக்கிறது.

கூமி கபூர் : தமிழக அரசியலில் 3-வதாக ஒரு கட்சி வலுப்பெற இடம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

பதில் : எதிர்காலத்தில் என்ன நிகழும் என நான் கணிக்க முடியாது. ஆனால் இப்போ தேர்தல் நடந்தால், நிச்சயம் திமுக அரசாங்கத்தை பார்ப்போம்.

கூமி கபூர் : இன்றைய சிக்கலான அரசியல் சூழலில், சபாநாயகர் மற்றும் கவர்னரின் செயல்பாடு எப்படி இருந்தது?

பதில் : முன்பு மகாராஷ்டிராவுக்கும் எங்களுக்கும் சேர்த்து ஒரே கவர்னரை கொண்டிருந்தோம். அவர் அப்போது தமிழகத்தில் இருப்பதே அரிதாக இருந்தது. ஒவ்வொரு முறை மக்கள் அவரை சந்திக்க விரும்பிய போதும், நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பல விஷயங்களை தாமதப்படுத்த அது ஒரு சாக்குபோக்காக அமைந்தது.

இப்போ கடைசியா ஒரு கவர்னரை பெற்றிருக்கிறோம். இனி செயல்பாட்டில் பெரிய மாற்றம் இருக்கும் என நினைக்கிறேன்.

ஹரிஷ் தாமோதரன் : பாஜக-வுடன் உங்கள் கட்சிக்கு வெறுப்புணர்வு இருக்கிறதா? வாஜ்பாய் தலைமையிலான பாஜக-வுக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக-வுக்கும் வித்தியாசம் காண்கிறீர்களா?

பதில் : இப்போதைய பாஜக அரசுடன் தமிழகத்திற்கு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், இது போன்றவற்றில் எங்கள் கட்சியின் உயர்மட்டத்தில்தான் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வருவதாக நான் நினைக்கிறேன். செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்.

‘நீட்’ விஷயத்தில் அண்மையில் தமிழகத்தில் என்ன நடந்தது? என்று பாருங்கள். ஒரு மாணவி தனது உயிரை இழந்திருக்கிறார். மத்திய அரசு தமிழகத்தை புரிந்துகொள்ள மறுப்பதையே இது காட்டுகிறது. அந்த சம்பவம், ஒவ்வொருவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. எங்கள் மாணவர்களில் ஏராளமானோர் தங்கள் வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு, சமூக நீதியில் உறுதிமிக்க மாநிலம். இது போன்ற செயல்பாடுகள் தமிழக அரசியலுக்கும் தமிழ் சமூகத்திற்கும் எதிராக அமைகிறது. இது போன்ற அம்சங்களில் நாங்கள் எப்படி சமரசம் செய்துகொள்ள இயலும்? அவர்கள் மைனாரிட்டி சமூகத்தினரை நடத்தும் விதம், நாம் அனைவரும் பார்த்திருக்கும் கொலைகள், உணவு மற்றும் இந்துத்வா தொடர்பான அவர்களின் நிலைப்பாடு, இப்படி ஒவ்வொன்றும் இயல்பில் இருந்து வித்தியாசமானவை.

லிஸ் மாத்யூ : பாஜக போன்ற ஒரு கட்சி தமிழக அரசியலில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியும் என நினைக்கிறீர்களா? முடியாதென்றால், பாஜக-வை தடுப்பது எது?

பதில் : மதம், மொழி, தமிழ் அடையாளம், சமூக நீதி உள்ளிட்ட விஷயங்களில் தமிழ்நாடு மிகத் தெளிவாக இருக்கிறது. இவற்றை ஏற்காத கட்சி, தமிழகத்தில் தனக்கான இடத்தை பெற முடியாது. அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி! அதிமுக தோற்றால், மீண்டும் அதிகாரத்திற்கு வர முடியும் என அவர்களே எதிர்பார்ப்பதாக நான் நினைக்கவில்லை.

ஷோபனா சுப்ரமணியன் : கமல்ஹாசன் அரசியலில் இணைந்தால், எந்த அளவுக்கு வெற்றி பெறுவார் என கருதுகிறீர்கள்?

பதில் : என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால், அவரது இலக்கு மற்றும் தமிழக அரசியலில் எதை முன்வைக்கப் போகிறார் என்று எனக்குத் தெரியாது. ஒரு அரசியல் கட்சி தனது இலக்குகளை அடைய எப்படி திட்டமிடுகிறது என்பதை தெளிவாக தெரிவித்தாக வேண்டும். காவிரி, நீட் உள்ளிட்ட பிரச்னைகளில் அவர்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இதையெல்லாம் தெரியாமல், நான் கருத்து கூறுவது (கமல்ஹாசன் பற்றி) சரியாக இருக்காது.

ராவிஷ் திவாரி : தமிழகத்தில் மது விலக்கிற்கு அரசியல் ஆதரவு கிடைக்க என்ன காரணம்?

பதில் : ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள் என நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் தமிழகத்தில் அது முக்கியப் பிரச்னை. நாங்கள் பேசிக்கொண்டிருப்பது, ‘சோஷியல் டிரிங்கிங்’ பற்றி அல்ல! மாநிலம் மது மயமாகிக் கொண்டிருப்பது பற்றி பேசுகிறோம். நகரங்களில் கொஞ்ச எண்ணிக்கையில் ‘சோஷியல் டிரிங்கர்’களாக இருப்பவர்களின் கொண்டாட்டம் அல்லது அவர்களின் விருப்பத்திற்காக, மாநிலத்தின் இதர பகுதிகளில் நடப்பவற்றில் எங்கள் கண்களை குருடாக்கிக் கொள்ள முடியாது.

மாநிலம் மது மயமாவது, மிகக் கொடுமையானது. ஏராளமான இளைஞர்கள் அதற்கு அடிமையாகி, தங்கள் பணிகளை செய்ய இயலாமல் உள்ளனர். அவர்களால் சமூகத்திற்கு எதையும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், காலையில் எழுந்ததுமே ‘டாஸ்மாக்’ கடைகளுக்குத்தான் அவர்கள் செல்கிறார்கள். அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே இது பெரிய பிரச்னை. மிக மோசமாக பாதிக்கப்படும் பெருவாரியான மக்களின் இந்தப் பிரச்னையில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

முஸாமில் ஜலீல் : 2019 தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு ராகுல் காந்தி தலைமை தாங்க முடியுமா?

பதில் : அவர் நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.அவர் மீதும் காங்கிரஸ் மீதும் நிறைய நம்பிக்கைகள் இருக்கின்றன. மக்களுடன் அவர் தொடர்பு கொள்கிறார். தமிழகத்தில் அவர் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அவர் எழுப்பிய பிரச்னைகள் மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்தன.

(திமுக-வில் அடுத்த தலைமை யார் என்பதில் பிரச்னையா? உள்ளிட்ட கேள்விகளுக்கு கனிமொழியின் பதில் அடுத்த தொகுப்பில்)

தமிழில் : ச.செல்வராஜ்

Mk Stalin Dmk M Karunanidhi Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment