தங்கக் கடத்தலைத் தடுக்கும் ஒரு பெரிய நடவடிக்கையாக, பெங்களூரு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கன்னட நடிகை ரன்யா ராவை கைது செய்து அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது.
ஆங்கிலத்தில் படிக்க:
திங்கட்கிழமை இரவு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு வந்த ரன்யா, அடிக்கடி சர்வதேச பயணங்கள் மேற்கொண்டதால், டி.ஆர்.ஐ கண்காணிப்பில் இருந்தார். அவர் பெரும்பாலான தங்கத்தை கண்ணுக்குத் தெரியாமல் அணிந்திருந்ததாகவும், தனது ஆடைகளில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் பணியாற்றும் டிஜிபி அந்தஸ்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் மகள் ரன்யா. அவருக்கு சட்ட அமலாக்கப் பிரிவினரிடமிருந்து ஏதேனும் ஆதரவு இருந்ததா என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், விமான நிலையத்திற்கு வந்ததும், ரன்யா தன்னை டி.ஜி.பி-யின் மகள் என்று கூறிக்கொள்வார், உள்ளூர் காவல்துறையினரை அழைத்து தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வார். இந்த அதிகாரிகள் கடத்தல் வலையமைப்பில் ஏதேனும் தொடர்பு கொண்டிருந்தார்களா அல்லது அறியாமலேயே பயன்படுத்தப்பட்டார்களா என்று டி.ஆர்.ஐ இப்போது விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் டி.ஆர்.ஐ இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
‘மாணிக்யா’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான ரன்யா, தமிழில் விக்ரம் பிரபுவின் வாகா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் பிற தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 15 நாட்களில் அவர் 4 முறை துபாய்க்கு பயணம் செய்ததைக் கவனித்த டி.ஆர்.ஐ அவரது நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொடங்கியது. உளவுத்துறை தகவலின் அடிப்படையில், விமான நிலையம் வந்தவுடன் டி.ஆர்.ஐ அவரை இடைமறித்தது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரன்யா பெங்களூருவில் உள்ள டி.ஆர்.ஐ தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலும் விசாரிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.