Kannada newspaper Vishwavani booked : மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ப்ரதீப் கவுடா, கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியின் மகன் நிகில் குறித்த தவறான கருத்துகளை வெளியிட்டது தொடர்பாக பிரபலமான கன்னட பத்திரிக்கை விஷ்வவாணி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். மான நஷ்ட வழக்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் அப்பத்திரிக்கையின் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மே 25ம் தேதி வெளியான அந்த செய்தியில், கலக்கத்தை உண்டாக்கும் தேவகவுடாவின் பேரன்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலில் மாண்டியா தொகுதியில் எச்.டி. குமாரசாமியின் மகன் மற்றும் தேவகவுடாவின் பேரனுமான நிகில் குமாரசாமி போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அதனால் ஆத்திரமுற்ற அவர் தன்னுடைய தாத்தா தான் தன்னுடைய தோல்விக்கு காரணம் என்று மோசமான வார்த்தைகளால் திட்டியதாக செய்தி வெளியிடப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில், இது போன்ற ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை என்றும், கற்பனை திறன் கொண்டு ஒரு செய்தியை எழுதி, நிகிலின் அரசியல் வாழ்க்கையை கேள்விகுறியாக்கி வெளியிட்டுள்ளது விஷ்வவாணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு செய்தியில், மே 23ம் தேதி இரவு தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொள்ளாத நிகில் மைசூர் ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தது.
என் மகன் குறித்து தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் – குமாரசாமி
தேவகவுடாவிற்கு எதிராக நிகில் குமாரசாமி என்று தலைப்பிட்டு, தேவகவுடா காங்கிரஸிடம் பேசி, மாண்டியாவிற்கு பதிலாக தனக்கு வேறொரு தொகுதியை ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம் என்றும், ப்ரஜ்வால் ரெவ்வான்னாவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை (ஹஸ்ஸன்) போல் ஒரு வெற்றி வாய்ப்பிற்குரிய தொகுதியை ஏன் ஒதுக்கித் தரவில்லை என்றும் கேள்வி எழுப்பியதாகவும் அந்த செய்தி குறிப்பில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த செய்திகள் குறித்து குமாரசாமியிடம் கேள்வி எழுப்பிய போது, என் மகனைப் பற்றி தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று நான் மீடியாவிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.