கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் அண்மையில் முதுகலை எம்ஏ பட்டப் படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ சிந்தனையாளர்களான கோல்வல்கர், சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரைப் பற்றி பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, பாடத்திட்டங்களைக் கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது. அதன்படி, முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்புகளில் இடம்பெற்றிருந்த சங்பரிவார், தீன் தயாள் உபாத்யா, பால்ராஜ் மதோ உள்ளிட்டோர் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், 'நவீன அரசியல் சிந்தனையில் தேசமும், தேசியமும்' என்ற தலைப்பில் சாவர்க்கர், கோல்வார்கர், முகமது அலி ஜின்னா, மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல், 'திராவிட தேசியம்' என்ற பெயரிலான பாடத்தில் தந்தை பெரியாரின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
கேரளப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சார்பு துணைவேந்தரான பிரபாஷ் தலைமையில் இரு நபர் கொண்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தப்பட்ட பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. திருத்தப்பட்ட பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சிந்தனையாளர்கள் வெவ்வேறு சித்தாந்தங்களை ஆதரிப்பது, அரசியல் துறையின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது.இந்தப் புதிய திருத்தப்பட்ட பாடத்திட்டம் மாணவர்களுக்கு மூன்றாவது செமஸ்டரில் கற்பிக்கப்படவுள்ளது.