காவல்துறை தொடங்கி அரசு உதவி இயக்குனர் வரை: முனைவர் குலசேகரனுக்கு 'சேவா ரத்னா' விருது

மதுரையில் உள்ள 'அறம் செய்ய விரும்பு' அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில், புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையின் உதவி இயக்குநர் முனைவர் கி. குலசேகரனுக்கு 'சேவா ரத்னா' விருது வழங்கப்பட்டது.

மதுரையில் உள்ள 'அறம் செய்ய விரும்பு' அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில், புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையின் உதவி இயக்குநர் முனைவர் கி. குலசேகரனுக்கு 'சேவா ரத்னா' விருது வழங்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Dr. K. Kulasekaran

காவல்துறை தொடங்கி அரசு உதவி இயக்குனர் வரை: முனைவர் குலசேகரனுக்கு 'சேவா ரத்னா' விருது

புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறையின் உதவி இயக்குனராகப் பணிபுரியும் முனைவர் கி.குலசேகரனுக்கு, மதுரையில் உள்ள 'அறம் செய்ய விரும்பு' அறக்கட்டளை சார்பில் 'சேவா ரத்னா' விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள நாரத கானா சபா அரங்கில் நடந்தது. விழாவில் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி, பேராசிரியர் ஞானசம்பந்தம், நடிகர் பாலா, 'நீதியின் குரல்' நிறுவனர் முனைவர் சி.ஆர். பாஸ்கரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Advertisment

1990-ம் ஆண்டு காவலராக புதுச்சேரி காவல்துறையில் பணியில் சேர்ந்த குலசேகரன், 2001-ஆம் ஆண்டு மக்கள் தொடர்பு அதிகாரியாக செய்தி மற்றும் விளம்பரத் துறையில் இணைந்தார். 2017-ம் ஆண்டு காரைக்கால் மாவட்டத்தின் செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குனராகப் பொறுப்பேற்றார்.

காரைக்காலில் பொறுப்பேற்றபின், அவர் மாவட்ட நிர்வாகத்தின் செய்திகளை டிஜிட்டல் முறையில் உடனடியாக மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் வாட்ஸ்அப் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்தார். இதனால், ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தபோதிலும், செய்தித் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில், காரைக்கால் மாவட்ட மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க இவர் கடுமையாக உழைத்தார். தனது மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோதும், புதுச்சேரிக்குச் செல்லாமல் காரைக்கால் மக்களுக்காகப் பணியாற்றினார்.

தனது தந்தை எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதால், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த குலசேகரன், காவல்துறை பணியில் இருந்தபோதே பி.எட்., எம்.ஏ (ஜர்னலிசம்), மற்றும் எல்.எல்.பி. பட்டங்களைப் பெற்றார். பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், அக்குபஞ்சர் மருத்துவத்திலும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் மட்டுமே பயின்ற இவர், காவல்துறை முதல் உதவி இயக்குனர் வரை படிப்படியாக உயர்ந்துள்ளார்.

Advertisment
Advertisements

அவரின் சமூக சேவை மற்றும் சிறப்பான பணிகளைப் பாராட்டி இதற்கு முன்பு 'வாழ்நாள் சாதனையாளர் விருது', 'சிறந்த சாதனையாளர் விருது' உட்பட பல்வேறு விருதுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Pudhucherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: