80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடலாம் என காரைக்கால் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சித் தலைவர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: “தேர்தல் ஆணையம், வருகின்ற லோக்சபா பொதுத் தேர்தல் 2024-ல் வாக்களிக்க வயது முதிர்ந்தவர்கள் (85 வயது மற்றும் அதற்கு
மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40% மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) ஆகிய பிரிவினருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
தேர்தல் ஆணையமானது அஞ்சல் வாக்குச் சீட்டு
மூலம் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதியை தேர்வு செய்வதற்கான தகுதி வயதை 80 வயதில் இருந்து 85 வயதாக திருத்தம் செய்துள்ளது. மேலும்,
மாற்றுத்திறனாளி வாக்காளர்ளை பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட சான்றளிக்கும் அதிகாரியால் குறிப்பிடப்பட்ட ஊனத்தின் அளவானது 40%க்கு
குறையாமல் இருக்க வேண்டும்.
இந்த வாக்காளர்களில், வீட்டில் இருந்தபடியே
வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள், தேர்தல் அட்டவணை வெளியிட்ட நாளிலிருந்து (16.03.2024) சம்மந்தப்பட்ட தேர்தல் அறிவிக்கபட்ட 5 நாட்கள்
(25.03.2024) வரையிலான காலகட்டத்தில் தங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (RO)விண்ணப்பிக்கலாம்.
இரண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள், ஒரு வீடியோகிராபர் மற்றும் ஒரு பாதுகாவலர் அடங்கியப் வாக்குப்பதிவு குழுவானது வாக்காளரின் வீட்டிற்குச் சென்று, வாக்காளரை தபால் வாக்குச்சீட்டில் வாக்களிக்கச் செய்து, வாக்குப்பதிவின் இரகசியத்தைக் காக்கப்படும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண்ணில் குறுஞ்செய்தி, தபால் அல்லது BLO மூலமாக வாக்குப்பதிவு குழு வருகை தரும் தேதி மற்றும் தோராயமான நேரம் குறித்து வாக்காளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படும். முதல் வருகையின் போது கொடுக்கப்பட்ட முகவரியில் வாக்காளர் இல்லையெனில், வாக்குச் சேகரிக்கும் குழுவானது அவர்களின் இரண்டாவது வருகையின் தேதி மற்றும் நேரத்தை அறிவிப்பார்கள். இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில், மேற்கொண்டு மறுவருகையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படமாட்டாது.
தபால் ஓட்டு மூலம் வீட்டில் வாக்களிக்கும் வசதியை தேர்வு செய்பவர்கள். வாக்குப்பதிவு நாளில் நேரடியாக வாக்குச்சாவடியில், வாக்களிக்க இயலாது.. மேலும், வாக்குப்பதிவு குழுவின் இரண்டாவது வருகையின் போதும் வீட்டில் இருக்க தவறிய வாக்காளர்களுக்குத் தபால் வாக்குச் சீட்டு (POSTAL BALLOT) மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
(EVM) ஆகிய இரண்டிலும் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும்.
வாக்குச்சாவடிகளுக்கு செல்ல விரும்பும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேவையான இடங்களில் உதவ சாய்வுதளம், சக்கர நாற்காலிகள், காத்திருப்புப் பகுதி, கழிப்பறைகள் போன்ற வசதிகள்
ஏற்படுத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“