புதுச்சேரி மாநிலத்தின் 2025 - 2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ரூ. 3,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார்.
இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து 30 நிமிடமாக உரையாற்றிக் கொண்டிருந்த போது, காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர் சிவா குறுக்கிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் எதையும் காரைக்காலில் செயல்படுத்தவில்லை. அதே வேளையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் ஏன் காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது" என்று கேள்வி எழுப்பினார்,
ஆனால், அதனைக் கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் ரங்கசாமி தனது உரையை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார். இதனை அடுத்து, காரைக்கால் புறக்கணிக்கப்படுவதாக கூறி பேரவையிலிருந்து பி.ஆர். சிவா வெளிநடப்பு செய்தார்.
முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை முழுமையாக தாக்கல் செய்த நிலையில், பேரவையை நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாகவும், சட்டமன்றத்தில் காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். சிவா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ, வைத்தியநாதன் ஆகியோர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும் சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.