காரைக்கால் மாங்கனித் திருவிழா, நாளை (ஜூலை 10) கோலாகலமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, காரைக்கால் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையை விளக்கும் வகையில், ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் நான்கு நாட்கள் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
மாங்கனித் திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று காலை பரமதத்தர் மற்றும் புனிதவதியார் திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று இரவு ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் மாலை விக்னேஸ்வர பூஜை ஆகியவற்றுடன் திருவிழா தொடங்கியது. திருக்கல்யாண வைபவத்திற்காக, பரமதத்தர் நேற்று இரவு ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக அம்மையார் மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
இன்று காலை காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில், மணமகன் சுவாமி பரமதத்தருக்கு பட்டாடை, நவமணி மகுடம் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, குதிரை வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின் புனிதவதியார் பட்டுப்புடவை உடுத்தி மணக் கோலத்தில் எழுந்தருளினார். பாரம்பரியப்படி திருமண மேடையில் மாப்பிள்ளை வீட்டாருக்கு மணமகள் வீட்டார் கவுரவிக்கப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து சிறப்பு யாகம் செய்யப்பட்டு திருமண விழாவிற்கான சடங்குகள் நடைபெற்றன.
காலை 10.30 மணியளவில் மேளதாளங்கள் முழங்க, ஆலய குருக்கள் புனிதவதியாருக்கு மாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், மாங்கனிகள் அடங்கிய தாம்பூலப் பைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம், புதுச்சேரி காவல்துறை டிஐஜி சத்திய சுந்தரம், குழு உறுப்பினர்கள் மற்றும் காரைக்கால் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா மற்றும் மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நாளை (ஜூலை 10) நடைபெறுகிறது.
செய்தி - பாபு ராஜேந்திரன்.