/indian-express-tamil/media/media_files/2025/09/07/puducherry-per-capita-income-2025-09-07-15-31-52.jpg)
புதுச்சேரி தனிநபர் வருமானம் உயர்வு: வருமான வரி ஆணையர் வசந்தன் பேச்சு!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தனிநபர் வருமானம் ரூ.1,14,710 ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரி தனிநபர் வருமானத்தை விட மேம்பட்டது என வருமான வரித்துறை முதன்மை ஆணையர் வசந்தன் தெரிவித்தார்.
காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிர்வாக அலுவலகத்தில், அலுவலர்களுக்கான வருமான வரி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓ.என்.ஜி.சி. காவிரி அசெட் நிர்வாக இயக்குனர் உதய் பஸ்வான் தலைமை தாங்கினார். மதுரை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் வசந்தன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசுகையில், நாகை மாவட்ட வருமான வரித்துறை சார்பில் காரைக்கால் பிரதேசத்தில் 2024-25 நிதியாண்டில் தனிநபர் வருமானம் ரூ.3,03,680-ஐ எட்டியுள்ளது. இது தேசிய சராசரி தனிநபரான ரூ.1,14,710-ஐ விட மிக மேம்பட்டதாகும் என்று தெரிவித்தார்.
மேலும், "காரைக்காலை உள்ளடக்கிய மதுரை மண்டலத்தின் 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி வளர்ச்சி விகிதம் 5.62% மட்டுமே இருந்தது. இது நாடு முழுவதும் உள்ள 13.57% வளர்ச்சி விகிதத்தை விட மிகவும் குறைவானதாகும். எனவே, இந்த நிதியாண்டில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அனைவரும் தாமாக முன்வந்து தங்கள் வருமான வரியைச் செலுத்த வேண்டும். வரி படிவம் தாக்கல் செய்யும்போது, உரிய ஆதாரங்களுடன் கூடிய வரி விலக்குகளை மட்டுமே கோர வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், தஞ்சாவூர் வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ராஜராஜேஸ்வரி, வருமான வரிச் சட்டங்கள் மற்றும் வரி செலுத்துவோர் நலன் குறித்து விளக்கமளித்தார். ஓ.என்.ஜி.சி. அலுவலர்களின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர். ஓ.என்.ஜி.சி. நிதிப்பிரிவு அதிகாரி அபூர்வ அகர்வால், புதுச்சேரி தணிக்கைப் பிரிவு பொது மேலாளர் மேரி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர். இறுதியில், நாகை மாவட்ட வருமான வரி அலுவலர் சங்கரநாராயணன் நன்றி தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.