Advertisment

கோவில் நிலத்தை பட்டா மாற்றி விற்க உதவிய துணை ஆட்சியர் கைது; ரூ.4 கோடி லஞ்சம் பெற்றது விசாரணையில் அம்பலம்

காரைக்காலில் கோவில் நிலத்தை பட்டா மாற்றி விற்ற வழக்கில் துணை ஆட்சியர், நில அளவையாளர் கைது; ரூ. 4 கோடிக்கு லஞ்சம் பெற்றது போலீஸ் விசாரணையில் அம்பலம்

author-image
WebDesk
New Update
karaikkal sub collector

காரைக்காலில் கோவில் நிலத்தை பட்டா மாற்றி 100 பிளாட்டாக நூறு பேருக்கு விற்பனை செய்து ரூபாய் 4 கோடி பணம் பெற்ற வழக்கில் சப் கலெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அரசு சார்பாக வீட்டுமனைகளாக மாற்றி விற்பதாக கூறி பொதுமக்களிடம் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து முன்பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. கோவில் இடத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் எழுப்பவும் முயற்சி நடந்தது. இதுபற்றி தெரியவந்ததையடுத்து எதிர்ப்பு வலுத்தது. 

இந்து முன்னணி நகரத் தலைவர் ராஜ்குமார் தலைமையில், மாவட்ட கலெக்டரிடம் உரிய விசாரணை செய்ய வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை தலையீடு இருப்பதால், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மேற்பார்வையில் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கோவில் இடத்தை பட்டா செய்து கொடுப்பதற்கு மாவட்ட துணை கலெக்டர் ஜான்சன் தான் கையெழுத்து போட்டு ஒப்புதல் அளித்தது தெரியவந்தது. இந்த பிரச்சினை திசை மாறியதால் துணை கலெக்டர் ஜான்சன், பட்டா தொடர்பான ஆவணங்களில் இருப்பது தனது கையெழுத்து இல்லை என்றும், அதை யாரோ போலியாக போட்டு உள்ளனர் என்றும் போலீசில் தெரிவித்தார்.

இதனால் உஷாரான போலீசார், போலிகையெழுத்து போட்ட நபர் யார்? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து புரோக்கர் சிவராமன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அடுத்த கட்டமாக நில மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக காரைக்கால் நகராட்சி அரசு நில அளவையர் ரேணுகாதேவி கடந்த மாதம் 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து காரைக்கால் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஆனந்த் மற்றும் அரசு அதிகாரிகள் என சுமார் 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 7 ஆம் தேதி பத்திர எழுத்தர் கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சர்வேயர் ரேணுகாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் துணை கலெக்டர் ஜான்சன் உதவியோடுதான் அனைத்து ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும், ஆனந்த் என்பவர் மூலம் பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பட்டா வழங்கியதும், அவரின் பெயரில் உள்ள 3 வங்கி கணக்கில் ரூ.4 கோடியே 32 லட்சம் பெற்றுள்ளதும் தெரியவந்தது.

போலீசாரின் தொடர் விசாரணையில், கோவில் நிலத்தை பட்டா போட்டு கொடுக்க துணை கலெக்டர் ஜான்சன் தான் கையெழுத்திட்டார் என்றும், போலி கையெழுத்து என வழக்கை திசை திருப்ப போலீசில் அவர் ஒரு பொய்யான புகாரை கொடுத்ததும் தெரியவந்தது. கோவில் நிலத்தை காக்க வேண்டிய அரசு அதிகாரியே பொதுமக்களுக்கு பட்டா போட்டு விற்க முயன்றது வெட்ட வெளிச்சமானது.

தொடர்ந்து கடந்த 2 நாட்களாக துணை கலெக்டர் ஜான்சனை போலீசார் விசாரித்து வந்தனர். அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், அவரது அலுவலகம் என 3 இடங்களுக்கும் மாறி மாறி அழைத்துச் சென்று 15 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

துணை கலெக்டர் ஜான்சன் அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு, கோவில் நிலத்தை பட்டா போட்டு கொடுப்பதற்கான சில ஆவணங்கள் போலீசார் 'கையில் சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன் அடிப்படையில் காரைக்கால் நகர போலீசார் மாவட்ட துணை கலெக்டர் ஜான்சன் மீது இ.பி.கோ. 420, 468, 471, 473, 34 ஆகிய 5 சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று இரவு கைது செய்தனர்.

போலி ஆவணங்கள் தயார் செய்து கோவில் நிலத்தை விற்க கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தது, நில அளவையரை மிரட்டியது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜான்சன் காரைக்கால் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு லிசி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அவரது முன் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். துணை கலெக்டர் ஜான்சனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேலும் பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry Karaikkal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment