கர்நாடகா காங்கிரஸ் வெற்றிப் பின்னணி : பாஜக.வின் குதிரை பேரத்தை ‘டேப்’ செய்தது எப்படி?

காங்கிரஸ் மேலிடத் தலைவர்களின் ஒப்புதலுடன் இந்த ஸ்டிங் ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தியவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்களில் வைத்து பாதுகாத்தவரான டி.கே.சிவகுமார்தான்!

By: May 21, 2018, 5:05:47 PM

கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு பாஜக.வின் குதிரை பேரத்தை காங்கிரஸ் திட்டமிட்டு ‘டேப்’செய்தது எப்படி? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகாவில் 104 இடங்களில் ஜெயித்த பாஜக, தனது முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவை முதல்வர் பதவி ஏற்க வைத்தது. காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பாவை வீழ்த்த வியூகம் வகுத்தன. கடைசியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

எடியூரப்பாவை ராஜினாமா நோக்கி நெருக்கித் தள்ளியதில், காங்கிரஸ் நடத்திய ‘ஸ்டிங் ஆபரேஷன்’னுக்கும் முக்கிய பங்கு உண்டு. கர்நாடகா நிலவரங்களை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் அடுத்தடுத்து பாஜக தரப்பிலிருந்து பேரம் பேசிய ஆடியோ டேப்களை காங்கிரஸ் ரிலீஸ் செய்தபடியே இருந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் தினம் இரவு பெல்லாரியை சேர்ந்த கனிம அதிபரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான ஜனார்த்தன ரெட்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடா டட்டால்-லுடன் நடத்திய பேரம் ஆடியோ டேப்பாக வெளியானது. சனிக்கிழமை கர்நாடகா சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடந்து கொண்டிருந்த வேளையில் எடியூரப்பா, பாஜக மேலிடப் பொறுப்பாளரான முரளிதரராவ் ஆகியோரின் ‘டேப்’களும் வெளியாகி அதிர வைத்தன.

மொத்தம் 6 டேப்களை இப்படி காங்கிரஸ் ‘ரிலீஸ்’ செய்தது. இது பாஜக.வின் குதிரை பேரத்தை நாடு முழுவதும் சொல்வதாக இருந்தது. பாஜக மேலிடத்திற்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பிறகே ராஜினாமா முடிவுக்கு வந்தார் எடியூரப்பா.

இதற்கிடையே பாஜக தலைவர்களின் பேரத்தை திட்டமிட்டே காங்கிரஸ் ‘டேப்’ செய்த தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் 78 எம்.எல்.ஏ.க்களையும் மேலிடத் தலைவர்கள் சந்தித்து பேசியபோது, ‘உங்களில் யார், யாருக்கு பாஜக தரப்பில் இருந்து போன் கால்கள் வருகின்றன?’ என கேட்டனர். அப்போது ஏறத்தாழ முக்கால்வாசி எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு பாஜக தரப்பில் இருந்து போன் கால்கள் வருவதாக கைகளை உயர்த்தினர்.

இதைத் தொடர்ந்து சுமார் 40 எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்து, அவர்களது போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் உத்தரவின் பேரிலேயே இதை ‘ஸ்டிங் ஆபரேஷன்’னாக செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையே பாஜக.வுக்காக இடைத்தரகர் ஒருவரும் காங்கிரஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் பேசினார். அந்த இடைத்தரகரிடம், ‘காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.சி.பட்டீல் சில எம்.எல்.ஏ.க்களுடன் அணி மாறத் தயாராக இருப்பதாக’ காங்கிரஸ் தரப்பில் இருந்தே தகவலை ‘பாஸ்’ செய்தனர். இடைத்தரகரும் அந்தத் தகவலை பாஜக முகாமுக்கு பாய்ச்சினார்.

அதைத் தொடர்ந்து ஜனார்த்தன ரெட்டி, எடியூரப்பா ஆகியோர் அடுத்தடுத்து பி.சி.பட்டீலைத் தொடர்புகொண்டு பேசி ‘டேப்’பில் சிக்கினார்கள். பி.சி.பட்டீலுக்கு அமைச்சர் பதவி தருவதாக எடியூரப்பாவே பேசி சிக்கிக் கொண்ட கூத்தும் நடந்தது.

பாஜக தலைவர்களை நேரில் வரவழைத்து, பணத்தை அள்ளிக் கொட்டுவது வரை ஸ்டிங் ஆபரேஷனில் நடத்தி முடிக்கவே கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் மேலிடத் தலைவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே ஆடியோ டேப்புடன் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ நின்று போனது.

காங்கிரஸ் தரப்பில் இந்த ஸ்டிங் ஆபரேஷனுக்கு பி.சி.பட்டீலை தேர்வு செய்ததற்கும் ஒரு காரணம் உண்டு. 61 வயதான பி.சி.பட்டீல், காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி பிறகு அரசியலுக்கு வந்தவர்! அவரால்தான் எதிர் தரப்புக்கு சந்தேகம் ஏற்படாத அளவில் பேச முடியும் என்பதாலேயே இடைத்தரகர் மூலமாக அவரது பெயரை காங்கிரஸ் கசிய விட்டது.

காங்கிரஸ் மேலிடத் தலைவர்களின் ஒப்புதலுடன் இந்த ஸ்டிங் ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தியவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்களில் வைத்து பாதுகாத்தவரான டி.கே.சிவகுமார்தான்! இந்தியா முழுவதும் கில்லாடித்தனமாக சித்து விளையாட்டுகளை அரங்கேற்றும் பாஜக, இந்த விஷயத்தில் தோற்ற இடம் கர்நாடகாதான்!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Karanataka congress sting operation released six audio recordings

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X