தீப்திமான் திவாரி
Kargil hero fakes mail: இந்திய விமானப்படையைச் சேர்ந்த கார்கில் போர் வீரரை எல்லை பாதுகாப்பு படை மற்றும் டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விமானத்தில் பறக்க வேண்டும் என்பதற்காக ஆள்மாறாட்டம் செய்து உண்மைகளை தவறாக சித்தரித்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சரின் விமானத்தில் பறக்கும் நோக்கத்துடன் எல்லை பாதுகாப்பு படை விமானப்படைப் பிரிவின் ஓய்வுபெற்ற விங் கமாண்டர் ஜே.எஸ்.சங்வான் தனது உயர் அதிகாரியைப் போல ஆள்மாறாட்டம் செய்து உற்பத்தி நிறுவனமான லார்சன் மற்றும் டூப்ரோ (எல் & டி) க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில் சங்வான் தன்னை பரிந்துரை செய்து, சரிபார்ப்பதற்காக தனது போன் நம்பரையும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எல் & டி-க்கு அனுப்பிய மின்னஞ்சல்களில், சங்வானுக்கு எல் & டி விமானங்களில் பறக்க ஒரு வாய்ப்பு வழங்குமாறு கோரி பரிந்துரைத்துள்ளார். மேலும், அவர் 4000 மணி நேரத்துக்கும் மேல் விமானத்தில் பறந்த தலைமை விமானி (Pilot in Command) பயிற்சி பெற்ற தரமுள்ள எம்பிரேயர் விமானி என்று கூறியுள்ளார். இதையடுத்து, ஜூலை மாதம் சென்னையிலிருந்து டெல்லிக்கும் மும்பைக்கும் விமானத்தை இயக்க எல் & டி ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், இந்த திட்டம், அவர் சென்னைக்கு செல்வதற்கு ஒரு நாள் முன்னர்தான் வெளியே தெரியவந்துள்ளது. இதனிடையே, எல் & டி சில தெளிவுபடுத்தலுக்காக எல்லை பாதுகாப்பு படையை தொடர்பு கொண்டு பேசியதில், அது போன்ற பரிந்துரைகள் ஏதும் அனுப்பப்படவில்லை என்று கூறியுள்ளனர். அவர் தலைமை விமானி (Pilot in Command) என்று குறிப்பிட்டிருக்கையில், எல்லை பாதுகாப்பு படை சங்வானை ஒரு இணை விமானியாகக் கூட மதிப்பிடவில்லை என்று கூறியுள்ளது.
எல்லை பாதுகாப்பு படை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த அதிகாரி ஒரு எம்பிரேயர் விமானியாக போதுமான நேரத்தை அடைய மத்திய உள்துறை அமைச்சருடன் விரைவாக பறக்க தவறான முறையில் முயற்சி செய்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், யாரேனும் முக்கிய பிரமுகர் செல்லும் விமானத்தை ஓட்ட வேண்டுமானல், அந்த விமானி குறைந்தது 500 மணி நேரம் பறந்திருக்க வேண்டும். இதே உள்துறை அமைச்சருடன் பறக்க வேண்டுமானால் கூடுதலாக 1000 மணி நேரங்கள் விமானத்தில் பறந்திருக்க வேண்டும்.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள உள்நாட்டு விமான நிலைய காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. “இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கணினி அறையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் எங்களுக்கு அனுப்புமாறு எல்லை பாதுகாப்பு படைக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.” என்று விசாரணை அதிகாரி சப் இன்ஸ்பெக்டர் அனுஜ் சர்மா ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸிடம் தெரிவித்தார்.
எல்லை பாதுகாப்பு படை ஏ.டி.ஜி எஸ்.எஸ்.சஹர் கூறுகையில் “இது மிகவும் கவனிக்க வேண்டிய கவலையான விஷயம். இந்த வழக்கில் அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இதில் ஒரு முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், குற்றவாளி எனக் கண்டறியப்படும் எவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். வழக்கு தொடர்பாக அனைத்து ஒத்துழைப்பும் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
எல்லை பாதுகாப்பு படை விமான படையின் விங் கமாண்டர் பிரவீன் அகர்வால் அளித்துள்ள புகாரில், “எனது அடையாளம் தனியார் ஆபரேட்டர்களுக்கு அனுப்பப்பட்டு தவறாக வழிகாட்டுவதற்கும்/தவறான தகவல்களை அனுப்புவதற்காகவும் தவறான நோக்கங்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பொது சிவில் விமான இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ) விதிமுறைகள் / இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) விதிகளின்படி டி.ஜி.சி.ஏ உரிமங்களின் சலுகைகளைப் பயன்படுத்துவதற்காக விமானப் பாதுகாப்பு அல்லது இந்திய விமானப்படையில் உள்ள பல்வேறு மதிப்பீடுகளைப் பயன்படுத்தி விமானப் பாதுகாப்பு மீறப்படலாம்” என்று இந்த புகாரில் விமானப் பாதுகாப்பு தொடர்பான அக்கறை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது மிக் 21 ரக விமானப் பறக்கும் பதக்கத்தை வென்ற சங்வான், நடுத்தர மல்டி ரோல் விமான மதிப்பீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவும் செயல்பட்டுள்ளார். சங்வான் கூறுகையில், அகர்வால் சார்பாக மின்னஞ்சல்களை எழுதியதாகவும் ஆனால், அதன் பொருள் மொத்தமும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதன் விளைவு இது என்றும் தான் அதை நல்ல நம்பிக்கையில் செய்ததாகவும் கூறியுள்ளார்.
“நான் ஒரு ராணுவ தலைமை விமானி (Pilot-in-Command) இதை நான் சிவில் தலைமை விமானியாக (Pilot-in-Command) மாற்ற முயற்சிக்கிறேன். பின்னர் எனது மொபைல் எண்ணை ஒரே ஒரு மெயிலில் மட்டும் கொடுத்துள்ளேன். அகர்வால் சார்பாக எழுதப்பட்ட மின்னஞ்சலில், அவரது மொபைல் எண்ணை கொடுத்துள்ளேன். இதில் நான் மறைக்க எதுவும் இல்லை ”என்று சங்வான் கூறியுள்ளார்.
தான் எந்த விதிகளையும் மீறவில்லை என்று வலியுறுத்தும் சங்வான், “எனக்கு டி.ஜி.சி.ஏ -இன் கீழ் தலைமை விமானி (Pilot-in-Command) மதிப்பீடு இல்லை. மற்றபடி, நான் ராணுவத்தில் கேப்டனாக பறந்திருக்கிறேன். நான் வி.ஐ.பி-களின் தலைமை விமானியாக ஆக பறக்க முடியாது. நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன், நான் இன்னும் மதிப்பிடப்படவில்லை. நான் வி.ஐ.பி-க்களின் தலைமை விமானியாக பறக்க விரும்புகிறேன். அதனால்தான் எல்லை பாதுகாப்பு படைக்கு வெளியே சில மணிநேரங்கள் பறக்க தேவைப்படுவதால் பறக்க முயற்சிக்கிறேன். இதுவே எனக்கு விமானப்படையில் என்றால் ஒரே ஆண்டில் கிடைத்திருக்கும். ஆனால், எல்லை பாதுகாப்பு படை என்பதால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் கிடைக்கவில்லை. யாரும் இது இப்படி நடக்க வேண்டும் என்று விரும்பவில்லை” என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், நாட்டுக்காக சேவை செய்வதற்காத்தான் அவ்வாறு செய்ததாகவும், மற்றபடி அவருக்கு வணிக விமானங்களில் பறக்க ஐந்து மடங்கு சம்பளம் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும், “ஒரு அண்ணா ஹசாரே விஷயங்களை மாற்ற முயற்சிக்கும்போது, அவருடைய வழிகளில் நாங்கள் தவறு காணத் தொடங்குகிறோம். நான் சும்மா உட்கார்ந்து பணம் சம்பாதித்திருக்க முடியும். ஆனால், வி.ஐ.பி விமானிகள் பறக்கக்கூடியதை விட நான் எல்லை பாதுகாப்பு படை விமானியாக அதிகம் செய்கிறேன்” என்று சங்வான் கூறினார்.
எல்லைப் பாதுகாப்பு படை விமானப்படை பிரிவில் இருந்து வி.ஐ.பி விமானத்தில் பறக்கத் தேவையான தர நிர்ணய செய்யப்பட்ட சொந்தமான விமானிகள் இல்லை என்பதால் பணி அனுபவமுள்ள ஓய்வுபெற்ற விமானப்படை விமானிகள் வழக்கமாக இந்த அமைப்பில் சேருகிறார்கள். இருப்பினும், இதில் பொதுமக்கள் பறப்பதால் இந்திய விமானப்படை விமானிகள் பிரான்ஸில் கடுமையான எம்பிரேயர் விமானி பயிற்சிக்கு செல்ல வேண்டும். பின்னர், அவர்கள் இந்திய விமானப்படையின் விமானி தேர்வு வாரியத்தின் தேர்வில், எழுத்து மற்றும் செய்முறை தேர்வு எழுத வேண்டும். அதன் தரத்தைப் பொறுத்து அவர்கள் விமானிகளாக மதிப்பீடு பெறுவார்கள்.
விமானப் படைப்பிரிவில் அத்தகைய போதுமான பறக்கும் நேரங்களைப் பெற முடியாததால் அதன் விமானிக்ளுக்கு கார்ப்பரேட் எம்பிரேயர் விமானங்களை இலவசமாக பறக்க வழங்குகிறது. எல்லை பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், சங்வான் தலைமை விமானியாக (Pilot in Command) மதிப்பிடப்படவில்லை என்றும் அவரை எம்பிரேயர் விமானியாக பறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அகர்வால் அளித்த புகாரின்படி, எல்லை பாதுகாப்பு படையில் விமானப்படைப் பிரிவின் சிறப்பு கணக்கு மேலாளர் சார்பில் எல்&டி நிறுவனத்திற்கு சங்வானுக்கு சேவைகள் வழங்க ஒரு மின்னஞ்சல் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது மின்னஞ்சல் அகர்வால் சார்பில் சங்வானின் அனுபவத்தையும் திறன்களையும் சிறப்பிக்கும் வகையில் ஜூன் 26 ஆம் தேதி எழுதப்பட்டுள்ளது.
அந்த கடிதம் சங்வானை ஒரு விமானப்படை பின்னணியில் இருந்து அவர் ஒரு திறமையான விமானி என்று விவரித்துள்ளது. 24 ஆண்டுகளுக்கும் மேலாக சுறுசுறுப்பாக பறக்கும் இவர் வாழ்க்கையில் 4000 மணி நேரம் பறந்த அனுபவம் உள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், அவர் விமானப்படையில் பயிற்றுவிப்பாளராக இருந்ததாகவும் இந்திய விமானப்படை விதிகளின் கீழ் எல்லை பாதுகாப்பு படை பறக்கவிட்ட எம்பிரேயர் 135 பிஜே-வில் தலைமை விமானியாக (Pilot in Command) பறந்திருப்பதாகவும் அந்த மெயில் கூறுகிறது. அதோடு, அந்த மெயில் இந்த விமானிக்கு பறப்பதற்கு சிறப்பு பயிற்சிகள் எதுவும் தேவையில்லை என்று கூறுகிறது.
ஜூலை 6 ஆம் தேதி எல் & டி தனது அலுவலகம் மூலம் அகர்வாலை தொடர்பு கொண்டது. ஜூலை 6, 2019 அன்று எல் & டி செயல்பாட்டு மேலாளரிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. எனது பெயரில் யாரோ ஒருவர் கடந்த 10 நாட்களாக நிறுவனத்துடன் தொடர்புகொண்டுள்ளார். எனது கோரிக்கையின் அடிப்படையில், விங் கம்மாண்டர் ஜே.எஸ்.சங்வானுக்கு ஜூலை 8, 2019 -இல் விமானத்தில் பறப்பதற்கு விமானத்தை பட்டியலிட்டு வைத்துள்ளது என்று கூறினர். ஆனால், “நான் எந்த கடிதத் (எல் & டி உடன்) தொடர்பும் செய்யவில்லை” என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த புகாரில், அனைத்து மெயில்களும் அனுப்பப்பட்ட பின்னர் டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. அவற்றை பாதுகாப்பு படை மீண்டும் திரேஷ் போல்டரில் இருந்து மீண்டும் பெறுவதற்கு எல்லை பாதுகாப்பு படை முயற்சித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.