கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சமரஜாநகர் மாவட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, வளர்ச்சி திட்டங்கள் குறித்து 15 நிமிடங்கள் பேப்பர் இல்லாமல் ராகுல் காந்தி பேச தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் முக்கிய எதிர்கட்சிகளான பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், கர்நாடக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று பிரதமர் மோடியும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாத்தை தொடங்கினார். முதற்கட்டமாக, பாஜக பலவீனமாக உள்ள மைசூர், உடுப்பி, பெலகாவி ஆகிய இடங்களில் இன்று பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். 5 நாட்களில் 15 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், சமரஜாநகர் மாவட்டத்தின் சந்தேமரஹள்ளி நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, "கர்நாடகாவில் பாஜக அலை இல்லை. ஆனால், பாஜகவின் புயல் வீசுகிறது. கர்நாடாகாவில் காங்கிரஸ் செய்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து 15 நிமிடங்கள் பேப்பர் இல்லாமல் ராகுல் காந்தி பேச தயாரா?. இந்தி, ஆங்கிலம் அல்லது அவரது தாய் மொழியில் கூட ராகுல் 15 நிமிடம் பேசலாம். ராகுல்காந்தி 15 நிமிடம் பேசினால் நான் ஓடிவிடுவேன் என அவர் கூறியிருக்கிறார். ராகுல் பேச மட்டும்தான் செய்வார், ஆனால் நாங்கள் தான் வேலைக்காரர்கள்" என்று பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.