Karnataka Assembly Election 2018 Results கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் வெளியாகி, அரசியல் குழப்பம் அதிகரித்திருக்கிறது.
Karnataka Assembly Election 2018 Results : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் இன்று (மே 15) வெளியாகின. இதில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வென்ற போதும், ஆட்சி அமைக்க தேவையான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் காங்கிரஸுக்கு ஆதரவாகவும் இல்லை. காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்தால் 115 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற முடியும் என்கிற சூழல் இருக்கிறது. இதைத் தொடர்ந்து ம.ஜ.த. தலைவரான குமாரசாமியை முதல்வர் ஆக்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்தது.
கர்நாடகா ஆளுனர் வாஜூபாய் ருதாபாய் வாலா-வை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோருடன் சென்று சந்தித்தார் குமாரசாமி. இன்னொரு புறம் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை அழைக்க வேண்டும் என பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, ஆளுனரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
கர்நாடகா தேர்தல் முடிவில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் ஆளுனர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. 2005-ம் ஆண்டு ராமேஷ்வர் பிரசாத்-இந்திய அரசு இடையிலான வழக்கில் சர்க்காரியா ஆணைய பரிந்துரைகள் அடிப்படையில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் ஏற்றுக்கொண்ட 4 வாய்ப்புகள் ஆளுனரின் முன்பு இருக்கின்றன
அந்த வாய்ப்புகள் இவைதான்...
1.தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்து பெரும்பான்மை பெற்ற கட்சிகளை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைக்கலாம்.
2.சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரும் (அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருக்கும்) தனிப்பெரும் கட்சியை (அப்படிப் பார்த்தால், பாஜக) அழைக்கலாம்.
3.தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையுடன் இணையும் கட்சிகள் அனைத்தும் அமைச்சரவையில் இடம் பெறும் வகையில் ஆளுனர் அழைக்கலாம்.
4.தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து சில கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையிலும், வேறு சில கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் நிலையிலும் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
ஆக, இந்த வாய்ப்புகள் ஆளுனர் தனது மனசாட்சி அடிப்படையில் முடிவு எடுக்கலாம் என்பதாகவே காட்டுகின்றன. கடந்த ஆண்டு கோவா தேர்தலில் காங்கிரஸைவிட பாஜக குறைவாக இடங்களையே ஜெயித்தது. அப்போது தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதை ஆளுனர் ஏற்கவில்லை. அதை சுட்டிக்காட்டியே இங்கு குமாரசாமியை ஆட்சி அமைக்க அனுமதிக்கும்படி காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.