கர்நாடகா தேர்தல் ‘எக்சிட் போல்’ அடிப்படையில் பார்த்தால் தனிப் பெரும் கட்சியாக பாஜக முந்துகிறது. ஆனால் கிங் மேக்கராக ஜனதா தளம்-எஸ் வருகிறது.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (மே 12) நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது. பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் சுமார் 10,000 வாக்காளர் அடையாள அட்டைகள் ஒரு ‘ஃப்ளாட்’டில் கண்டெடுக்கப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மரணம் அடைந்ததால், தேர்தல் நடைபெறவில்லை.
கர்நாடகா மாநிலத்தின் 222 தொகுதிகளிலும் சராசரியாக 70 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. மாநில ஆளும் கட்சியான காங்கிரஸ், மத்திய ஆளும் கட்சியான பாஜக, மாநிலத்தில் கணிசமான செல்வாக்கை வைத்திருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே போட்டி நிலவியது.
கர்நாடகாவில் நேற்று வாக்குப் பதிவு முடிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை (எக்சிட் போல்) மீடியா நிறுவனங்கள் வெளியிட்டன. பிரதானமாக வெளியான 8 ‘எக்சிட் போல்’ கணிப்புகளில் 6-ல் தனிப்பெரும் கட்சியாக பாஜக காணப்பட்டது. இவற்றில் 7 கணிப்புகள், கர்நாடகாவில் யாருக்கும் தனி மெஜாரிட்டி இல்லாத தொங்கு சட்டமன்றம் அமையும் என கூறியிருக்கின்றன.
கர்நாடகா தேர்தல் ‘எக்சிட் போல்’
கர்நாடகாவில் 3-வது அணியாக கருதப்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 முதல் 40 சீட்களை ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாக ‘எக்சிட் போல்’ கணிப்புகள் கூறின. எனவே ஆட்சி அமைக்கத் தேவையான 112 எம்.எல்.ஏ.க்களை எந்தக் கட்சியும் பெறாத பட்சத்தில், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு பெற்ற கட்சியே ஆட்சி அமைக்க முடியும். அந்தச் சூழலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்களான தேவகவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் ‘கிங்மேக்கர்’களாக மாறுவார்கள்.
கர்நாடகா ‘எக்சிட் போல்’ கணிப்புகளில் ஏபிபி - சி வோட்டர், நியூஸ் எக்ஸ் - சி.என்.எக்ஸ், ரிப்பப்ளிக் - ஜன் கி பாத் - நியூஸ் நேஷன் ஆகியன வெளியிட்ட ‘எக்சிட் போல்’களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வருகிறது. உள்ளூர் சேனலான திக்விஜய் - விஜயாவானி சர்வேயும் பாஜக.வுக்கு முன்னிலையை கொடுக்கிறது.
டைம்ஸ் நவ், இரண்டு ‘எக்சிட் போல்’ சர்வேக்களை வெளியிட்டது. டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர். இணைந்து நடத்திய ‘எக்சிட் போல்’ சர்வேயில் காங்கிரஸுக்கு சற்று முன்னிலை கிடைத்திருக்கிறது. ஆனால் டைம்ஸ் நவ் - டுடேஸ் சாணக்யா கணிப்பில் பாஜக.வுக்கு மெஜாரிட்டி கிடைப்பதாக வருகிறது. இந்தியா டுடே- ஆக்சிஸ் கணிப்பில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வருகிறது.
கர்நாடகாவில் 2013-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 122 இடங்களில் ஜெயித்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாஜக.வும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தலா 40 இடங்களில் வென்றன. அப்போது கர்நாடகா ஜனதா பக்ஷா என்ற பெயரில் தனிக்கட்சி நடத்திய எடியூரப்பா 6 இடங்களையும், தற்போது பாஜக.வின் வேட்பாளராக இறங்கியிருக்கும் ஸ்ரீராமுலு தலைமையிலான பதவரா ஷ்ராமிகாரா ரெய்டரா காங்கிரஸ் கட்சி 4 இடங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 15-ம் தேதி நடக்கிறது. கருத்துக் கணிப்புகள் எந்த அளவுக்கு நிஜமாகும் என்பது அன்று தெரியும்.