கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடகாவில் தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க ஆட்சியில் இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: சோனியாவுடன் வசிப்பார்; அல்லது எனது பங்களாவை ராகுலுக்கு கொடுப்பேன்: மல்லிகார்ஜுன கார்கே
இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனு மீதான பரிசீலனை ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24 ஆம் தேதி ஆகும்.
தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், நகர்ப்புற மற்றும் இளைஞர்களின் அக்கறையின்மை தவிர, பண பலமும் தேர்தல் இடத்தில் முக்கியப் பிரச்சினையாக உள்ளது என்று தெரிவித்தார். 2018 தேர்தலின் போது மொத்த பறிமுதல்களை விட, தேர்தல் நடத்தை விதிகளுக்கு முன்பே அதிக இலவசங்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே கைப்பற்றியுள்ளனர், என்று கூறினார். தேர்தலின் போது விநியோகம் செய்வதற்காக பைகளில் வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட பிரஷர் குக்கர்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர், என்றும் அவர் கூறினார்.
தேர்தல் நோக்கில், கர்நாடகா முழுவதும் 'விஜய் சங்கல்ப் யாத்ராவை' பா.ஜ.க நடத்தி வருகிறது. அதேநேரம் பா.ஜ.க.,வுக்கு எதிராக பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி காங்கிரஸ் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.
சனிக்கிழமையன்று, கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான 124 வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்தது, கர்நாடக அரசியலின் மற்றொரு முக்கிய சக்தியான மதச்சார்பற்ற ஜனதா தளம் 93 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரையும் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil