Karnataka Assembly election, 2023 Tamil News: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் தீவிர பிரச்சாரத்தை பெங்களூரு நகரம் கண்டது.
பிரதமர் மோடி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலத் தலைநகரில் 30 கி.மீ தூரம் வரை பிரமாண்டமான சாலைப் பயணம் மேற்கொண்டார். இது பெரும் கூட்டத்தை ஈர்த்தது. மறுபுறம், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் ராகுல் காந்தி நகரத்தில் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெண் பயணிகளின் உள்ளிட்ட பல்வேறு குழுக்களுடன் உரையாடி தீவிர பிரச்சாரம் செய்தார். காய்கறிகள் டெலிவரி செய்பவரின் பைக்கில் பயணித்தும், பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழக (பிஎம்டிசி) பேருந்தில் பயணிகளுடன் உரையாடியும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கடந்த சனிக்கிழமை பெங்களூரு நகரின் சாலைகளில் பயணித்த பிரதமர் மோடி ஜே.பி.நகர் 7-வது கட்டத்திலிருந்து மல்லேஸ்வரம் வரை 26 கி.மீ தூரம் வரை காரில் நின்றபடி பிரச்சாரம் செய்தார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, அவரது ரோட்ஷோ நியூ திப்பசந்திரா சாலையில் இருந்து டிரினிட்டி சர்க்கிள் வரை 6.5 கிமீ தூரம் சென்றது. இரண்டு நாட்களிலும் அவரது ரோட்ஷோக்கள் பெரும் கூட்டத்தை ஈர்த்திருந்தாலும், சில பெங்களூருவாசிகள் சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் தடைபடுவது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
சனிக்கிழமையன்று, நகரத்தில் பட்டயக் கணக்காளரின் இடைநிலைத் தேர்வு (குரூப்-I) திட்டமிடப்பட்டிருந்தது. இதேபோல், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலைப் பட்டப்படிப்பு) மற்றும் அகில இந்திய அளவில் ப்ரீ-மெடிக்கல் தேர்வு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. போக்குவரத்து நெரிசலால் தேர்வு எழுதும் மக்கள் தேர்வு மையத்தை அடைய நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது.
பெங்களூரு போக்குவரத்து காவல்துறை பெங்களூரு தெற்கு மற்றும் மத்திய வணிக இடங்களில் சாலைக் காட்சிகளை எளிதாக்குவதற்காக பல சாலைகளை அடைத்தது. இரண்டு நாட்களாக பெய்த மழையால் ஒரு சில சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இது மேலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ராகுல், தற்காலிகமாக நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் டான்ஸோ (Dunzo), ஸ்விக்கி (Swiggy), சோமாடோ (Zomato) மற்றும் ப்ளின்கிட் Blinkit போன்ற நிறுவனங்களின் டெலிவரி பார்ட்னர்களை சந்தித்தார். பின்னர், அவர் ஒரு டெலிவரி ஏஜெண்டின் ஸ்கூட்டரை நகரத்தின் வழியாக ஓட்டினார். அது "வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் தற்காலிகமாக வேலை செய்யும் ஊழியர்களின் வேலை நிலை" போன்ற பிரச்சினைகள் பற்றி விவாதித்தை எழுப்பும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறினர்.
திங்கட்கிழமை, கன்னிங்ஹாம் சாலையில் காபி சாப்பிடுவதற்காக ராகுல் நின்றார். அருகில் இருந்த பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழக (பிஎம்டிசி - BMTC) பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பெண்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுடன் அவர் உரையாடினார். பின்னர் அவர் பேருந்தில் ஏறி, சில பெண் பயணிகளிடம் கர்நாடகா மீதான அவர்களின் வருத்தத்தை பற்றி பேசினார். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத்தை உறுதி செய்வதாகவும் உறுதியளித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
சில காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், பெண் பயணிகள் தங்களுடைய அன்றாடப் பயணம் மற்றும் விலைவாசி உயர்வின் தாக்கம் போன்ற பிரச்சினைகள் குறித்து ராகுலிடம் தங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொண்டனர். பின்னர், லிங்கராஜபுரத்தில் இறங்கிய ராகுல், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மற்றொரு பெண் குழுவுடன் தனது உரையாடலைத் தொடர்ந்தார்.
“ராகுல் காந்தி இந்த இடங்களுக்குச் சென்றபோது சாலைத் தடைகளோ, போக்குவரத்து நெரிசலோ இல்லை” என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார். அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.சிவண்ணா கூறுகையில், இது "திட்டமிட்ட நிகழ்வு அல்ல, தன்னிச்சையானது" என்றும், பாரத் ஜோடோ யாத்திரை ராகுல் மற்றும் அவரது கருத்துக்கள் மீதான மக்களின் பார்வையை மாற்றியுள்ளதாகக் கூறினார்.
பெங்களூரு நகரில் 28 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதன் விளிம்பில் இருந்தபோதிலும், கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக நகரத்தில் வலுவிழந்து வருகிறது. 2018, 2013 மற்றும் 2008 தேர்தல்களில் முறையே 11, 12 மற்றும் 17 இடங்களை வென்றது. இது காங்கிரஸின் தொடர்புடைய 15, 13 மற்றும் 10 இடங்களுடன் ஒப்பிடும்போது குறைவாகும்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (மே 10-ம் தேதி) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் பாஜக 224, காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கத்துக்கு ஒதுக்கீடு), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தமாக 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜத இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால் இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil