கர்நாடகா தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறது.
கர்நாடகாவில் மே 19-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
கர்நாடகா சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ.வான கே.ஜி.போப்பையாவை நியமனம் செய்து இன்று (மே 18) பிற்பகலில் ஆளுனர் வாஜூபாய் வாலா உத்தரவு பிறப்பித்தார். காங்கிரஸ் தரப்பில் சித்தராமையா அமைச்சரவையில் இடம் பெற்றவரான ஆர்.வி.தேஷ்பாண்டேவை தற்காலிக சபாநாயகராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஆளுனர் ஏற்கவில்லை.
கே.ஜி.போப்பையாவை தேர்வு செய்து ஆளுனர் அறிவித்தார்.
கே.ஜி.போப்பையா, ஏற்கனவே 2008-ம் ஆண்டு எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது தற்காலிக சபாநாயகராக இருந்தவர்! அப்போது மெஜாரிட்டிக்கு தேவையான 113 எம்.எல்.ஏ.க்களை விட 3 பேரை குறைவாக வைத்திருந்த பாஜக., சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாஜக.வுக்கு மெஜாரிட்டிக்கு தேவையான 112 எண்ணிக்கையைவிட, 8 பேர் குறைவாக இருக்கிறார்கள். காங்கிரஸ்-மஜத அணிக்கு 115 பேர் ஆதரவு இருப்பதாக சொல்கிறார்கள். இந்தச் சூழலில் போப்பையா நாளை சபாநாயகராக இருந்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துகிறார்.
இதற்கிடையே கே.ஜி.போப்பையா நியமனத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இவரைவிட சீனியரான தேஷ்பாண்டேவை நியமிக்க கோரி நாளை (மே 19) உச்ச நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறது காங்கிரஸ்! கர்நாடகாச் சிக்கல் ஓய்வதாக இல்லை.
கே.ஜி.போப்பையா தேர்வு எப்படி?
கே.ஜி.போப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து தகவல்கள் கிடைத்தன. தற்போது தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் சீனியர்களின் பட்டியலை சட்டமன்றச் செயலாளர், ஆளுனருக்கு அனுப்பி வைத்தார். அவர்களில் இருந்து கே.ஜி.போப்பையாவை தேர்வு செய்து ஆளுனர் அறிவித்தார்.
தற்காலிக சபாநாயகராக சீனியர் எம்.எல்.ஏ.வை நியமனம் செய்வது வழக்கம். அப்படிப் பார்த்தால், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆர்.வி.தேஷ்பாண்டே 8 முறை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்! தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் கே.ஜி.போப்பையா 4 முறையே எம்.எல்.ஏ.வாக இருந்திருக்கிறார்.
போப்பையா நியமனத்தை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ள நிலையில், பாஜக இந்த நியமனத்தை நியாயப்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ‘கே.ஜி.போப்பையா 2008-ம் ஆண்டிலேயே இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இப்போதைவிட அப்போது அவருக்கு 10 வயது குறைவு! காங்கிரஸ் தேவையில்லாத புகார்களை கூறிக்கொண்டிருக்கிறது. கே.ஜி.போப்பையா நியமனம் உரிய விதிமுறைகளின்படியே நடந்திருக்கிறது’ என்றார் அவர்!
உச்ச நீதிமன்றத்தில் இந்த நியமனம் தொடர்பாக காங்கிரஸ் முறையிட இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.