கேரள மாநிலம் வயநாட்டில் பிப்ரவரி 10ஆம் தேதி யானை தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு கர்நாடக அரசு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு எம்பியான ராகுலின் கோரிக்கையை ஏற்று, ரேடியோ காலர் யானை மிதித்து உயிரிழந்த அஜீஷ் ஜோசப் பனச்சியிலின் குடும்பத்துக்கு கர்நாடக அரசு ஞாயிற்றுக்கிழமை ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.
இது குறித்து கர்நாடக பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, “ராகுல் காந்தியை மகிழ்விக்க கர்நாடக வரி செலுத்துவோரின் நிதி மூர்க்கத்தனமாக வீணடிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கர்நாடகாவைச் சேர்ந்த யானையை பொய்யாகக் குற்றம் சாட்டுவது துரோகம் எனவும் கர்நாடகம் முழுவதும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்பதையும் விஜயேந்திரா சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே, வயநாட்டில் விவசாயி அஜீஷின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்து கர்நாடக அரசு தனது ஆலோசனையின் பேரில் முடிவு எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “ஸ்ரீ கே.சி.வேணுகோபால்ஜிக்கு நேற்று தொலைபேசி செய்தி மூலம் தெரிவிக்கப்பட்ட உங்கள் ஆலோசனையின்படி, கர்நாடக முதல்வர் மாண்புமிகு ஸ்ரீ சித்தராமையாவுடன் கலந்துரையாடிய பிறகு, கர்நாடக அரசு குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்தது என்பதை நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜீஷை மிதித்த யானை, நவம்பர் 30, 2023 அன்று கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூர் தாலுகாவில் பிடிபட்ட ஒரு தந்தமில்லாத ஆண் (மக்னா) ஆகும்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் வழிதவறிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
கேரளாவில், குறிப்பாக வயநாட்டில் உள்ள வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்பவர்கள், வன விலங்குகளுடன் மோதல் சம்பவங்களால் அதிக மனித இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : ‘Pleasing Rahul Gandhi’: Karnataka BJP chief slams Congress govt over Rs 15 lakh relief to kin of Kerala man killed by elephant
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“