அக்டோபர் 9, ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவில் உள்ள முக்கிய செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில், "கர்நாடக அரசாங்கத்தின் வரலாற்று முடிவை" அறிவிக்கும் வகையில் மாநிலத்தில் பா.ஜ.க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட விளம்பரம் தெறித்தது.
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடகாவில் பா.ஜ.க அரசு SC/ST களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் முடிவை அறிவித்து அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பட்டியலின பழங்குடி வால்மீகி நாயக்கர் சமூகத்தின் அடையாளமான மகரிஷி வால்மீகியின் பிறந்தநாள் அக்டோபர் 9 என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணியின் போது அமைக்கப்பட்ட நீதிபதி நாகமோகன் தாஸ் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, எஸ்.சி/எஸ்.டி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: தேசத்தின் சூழலை கெடுக்கும் வெறுப்பு பேச்சுகள்: உச்சநீதிமன்றம்
”எஸ்.சி.,க்களுக்கான இடஒதுக்கீட்டை 17% (15% இலிருந்து) மற்றும் எஸ்.டி.,க்களுக்கான இடஒதுக்கீட்டை 7% (3% இலிருந்து) உயர்த்த மாநில அமைச்சரவை ஒருமனதாக ஒப்புக்கொண்டது,” என்று கூட்டத்திற்குப் பிறகு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
18 மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை, வால்மீகி சமூகத்தினரை ஈர்க்கும் காங்கிரஸ் முயற்சிகளுக்கு எதிராக, அந்தச் சமூகத்தின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளும் பா.ஜ.க.,வின் முயற்சியாகக் கருதப்படுகிறது.
மாநிலத்தில் உள்ள 52 பழங்குடியினரில் மிகப் பெரிய குழுவான வால்மீகி நாயக்கர்கள் பெரும்பாலும் பா.ஜ.க.,வை ஆதரித்துள்ளனர். உண்மையில், 2011ல் வால்மீகி ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவித்தது பா.ஜ.க முதல்வர் பி.எஸ் எடியூரப்பாதான். 2019ல் பா.ஜ.க அமைச்சர் பி. ஸ்ரீராமுலு, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால், வால்மீகி நாயக்கர் சமூகத்தின் நீண்டகாலக் கோரிக்கையான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவதாக உறுதியளித்தார். .
எஸ்.சி சமூகத்தில், எஸ்.சி (இடது) குழு என அறியப்படும் ஒரு பெரிய பிரிவினர் பா.ஜ.க ஆதரவை அனுபவிப்பதாகக் கருதப்படுகிறது, பெரும்பாலும் தலித்துகளில் அதிக ஆதிக்கம் செலுத்தும் எஸ்.சி (வலது) பிரிவினர், அந்தச் சமூகத்தில் இருந்து மல்லிகார்ஜுன் கார்கே போன்ற வலுவான தலைவர்கள் உள்ளதால் பெரும்பாலும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இந்த வாரம் சித்ரதுர்கா, பல்லாரி மற்றும் ராய்ச்சூர் போன்ற பழங்குடியினர் மற்றும் எஸ்.சி ஆதிக்கப் பகுதிகள் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில், எஸ்.சி/எஸ்.டி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க பசவராஜ் பொம்மை அரசு முடிவு செய்துள்ளது.
”இது பாஜகவின் அரசியல் முடிவு. இத்தனை நாட்களும் நீதிபதி நாகமோகன் தாஸ் கமிஷன் அறிக்கை மீது அவர்கள் தூங்கினார்கள். அவர்கள் திடீரென்று எழுந்திருக்கிறார்கள். பாரத் ஜோடோ யாத்ரா, விலைவாசி உயர்வு, பா.ஜ.க மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் விளைவு இதுதான். அவர்கள் திடீரென்று இந்த பிரச்சினையில் தீவிரமாக மாறியுள்ளனர், ”என்று முன்னாள் காங்கிரஸ் எம்.பி,யும் வால்மீகி நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவருமான வி.எஸ் உக்ரப்பா கூறினார்.
எதிர்க் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ்-இன் மௌனமான பதில், 2023 மாநிலத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ.க நடவடிக்கை நன்கு கணக்கிடப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.
"நிச்சயமாக ஒரு தாக்கம் இருக்கும். ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் எதுவும் செய்யப்படவில்லை. சூழ்நிலை மாறி வருவதால், இந்த முடிவை எடுத்துள்ளனர்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். காங்கிரஸின் ஒரு பிரிவினர், "காங்கிரஸ் கட்சிக்கு நிறைவேற்றுவதற்கு போதுமான தைரியம் இல்லாத ஒரு பிரச்சினையை" பா.ஜ.க பயன்படுத்திக் கொண்டதாக கருதுகிறது. இது எங்கள் கட்சி செய்த தவறு என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த முடிவு சட்டத்தின் ஆய்வுக்கு உட்பட்டது என்பதை உறுதிப்படுத்த தீவிர முயற்சிகள் எதுவும் எடுக்கப்படாவிட்டாலும், OBC பிரிவில் அதிக இடஒதுக்கீடுகளைப் பெறுவதற்கு பஞ்சமசாலி லிங்காயத்துகள் போன்ற பிற சமூகங்களையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை இதேபோல் கவனிக்கப்படாவிட்டாலும், பா.ஜ.க.,வின் இந்த நடவடிக்கை "பூமராங்" ஆகிவிடும் என்று அரசியல்வாதிகள் மத்தியில் சில அச்சம் உள்ளது.
50 சதவீத இடஒதுக்கீட்டின் உச்ச நீதிமன்ற உச்சவரம்பு, தற்போதைய இடஒதுக்கீட்டு உயர்வுக்கு உடனடி சட்டத் தடையாக உள்ளது. தமிழகத்தின் ஒதுக்கீட்டை 69 சதவீதமாக உயர்த்துவது போல், கர்நாடக அரசு, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு விதிகளுக்கு அரசியலமைப்புத் திருத்தத்தை நாடலாம், இது நீதித்துறை ஆய்வுக்கு அப்பாற்பட்டது. இதனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அரசியல் சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.
"அவர்கள் ஒரு மசோதாவைக் கொண்டு வர வேண்டும், அதில் அவர்கள் காரணங்களைக் கூற வேண்டும் மற்றும் இந்திரா சாவ்ஹனி உச்ச நீதிமன்ற வழக்கின் பாரா 810 இன் படி விதிகளை உருவாக்க வேண்டும், இது விதிவிலக்கான சூழ்நிலைகளில், தரவுகளின் அடிப்படையில் மட்டுமே, 50% மேல் வரம்பிலிருந்து இடஒதுக்கீட்டை அதிகரிக்க முடியும் என்று குறிப்பிட்டது" என்று உக்ரப்பா கூறினார்.
தற்போதைக்கு, அரசில் எஸ்.சி-எஸ்.டி இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான நிர்வாக ஆணையை வெளியிடுவோம் என்றும், ஒதுக்கீட்டின் உச்சவரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்புத் திருத்தம் குறித்த முடிவு பின்னர் பரிசீலிக்கப்படும் என்றும் பசவராஜ் பொம்மை அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
”பல்வேறு சமூகங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும், எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் அனைத்து பிரச்சினைகளையும் விவாதித்து, இடஒதுக்கீடு உச்சவரம்பு பிரச்சினையை இறுதி செய்வோம், ”என்று சட்ட அமைச்சர் ஜே சி மதுசாமி கூறினார். மேலும், மத்திய அரசு அதன் 10% EWS இடஒதுக்கீட்டிற்குப் பிறகு 50% வரம்பை மீறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
பா.ஜ.க.,வை ஆதரிக்கும் ஆதிக்க லிங்காயத் சமூகத்தின் முக்கிய உட்பிரிவான பஞ்சமசாலி லிங்காயத்துகள் உட்பட பல்வேறு சமூகங்களின் இடஒதுக்கீடு தொடர்பான கூடுதல் முடிவுகளை எடுக்கவும், இடஒதுக்கீடு கோரிக்கைகளை பரிசீலிக்கவும் தற்போதைய பா.ஜ.க அரசாங்கம் ஜூலை 2021 இல் நீதிபதி சுபாஷ் ஆதி குழுவை அமைத்தது. 2023 மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு சாதிக் குழுக்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த கூடுதல் முடிவுகள் எடுக்கப்படலாம்.
"அனைத்து சமூகத்தினரின் கோரிக்கைகளையும் மேம்படுத்தும் ஒதுக்கீடுகளை" அரசாங்கம் கவனித்து வருவதாக அமைச்சர் மதுசாமி கூறினார். “எஸ்.சி/எஸ்.டி ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பான முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றை நாங்கள் முடிவு செய்துள்ளோம்... எங்கள் கட்சியும் அனைத்துக் கட்சிகளும் இந்த சமூகங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளித்துள்ளன. தற்போதைக்கு இதற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளோம்” என்று அமைச்சர் மதுசாமி கூறினார்.
அரசாங்கம் "மற்ற சமூகங்களைத் தூண்டிவிடவில்லை" என்றும், "முறையான அறிவியல் அறிக்கை இல்லாமல் ஒதுக்கீட்டுப் பிரச்சினைகள் பரிசீலிக்கப்படாது" என்றும் அவர் கூறினார். “எஸ்.சி/எஸ்.டி சமூகங்களைப் பொறுத்தவரை, மூன்று முதல் நான்கு அறிக்கைகள் நம் முன் உள்ளன. செயல்படுத்துவதில் நாங்கள் மெதுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், ”என்று மதுசாமி கூறினார்.
மேலும், “தற்போதுள்ள ஒதுக்கீட்டைத் தொடப்போவதில்லை, ஆனால் இடஒதுக்கீட்டை 50%க்கு மேல் அதிகரிக்கப் போகிறோம். இது பொதுப் பிரிவினரை ஓரளவு பாதிக்கலாம் ஆனால் ஓ.பி.சி.,யின் ஒதுக்கீட்டை நாங்கள் தொடப்போவதில்லை” என்றும் அவர் கூறினார். "வரும் நாட்களில், எஸ்.சி/எஸ்.டியினரிடையே உள்ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் நிபுணர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி எடுக்கப்படும்" என்று பசவராஜ் பொம்மை கூறினார்.
பின்னணி
மாநிலத்தில் SC மற்றும் ST ஒதுக்கீட்டை மேம்படுத்துவது பற்றிய பிரச்சினை, 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து சமூகங்களின் மக்கள்தொகை அதிகரிப்பை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களால் சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது, 2015 இல் முதன்முதலில் எழுப்பப்பட்டது.
அப்போது காந்தராஜூ கமிஷனின் கீழ் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, ஆனால் அதன் பரிந்துரைகள் 2018 மாநிலத் தேர்தல்களின் வெளிச்சத்தில் காங்கிரஸ் அரசால் ஏற்கப்படவில்லை.
2018-2019 க்கு இடையில் ஆட்சியில் இருந்த ஜே.டி.எஸ்-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி நாகமோகன் தாஸ் கமிஷனின் அரசியலமைப்பிற்கு அழுத்தம் கொடுக்க முடிந்தது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்த போது இந்த ஆணையம் தனது முதல் அறிக்கையை சமர்பித்தது. 2019 ஜூலையில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது.
உச்சநீதிமன்றம் விதித்துள்ள 50% இடஒதுக்கீடு வரம்பை மீறுவதற்கு சட்டத்தின் பாதுகாப்பைக் கோரும் வகையில், எஸ்.சி.,க்களுக்கு 15% முதல் 17% இடஒதுக்கீட்டையும், எஸ்.டி.,க்களுக்கு 3% முதல் 7% வரை இடஒதுக்கீட்டை உயர்த்துவது உட்பட ஏழு பரிந்துரைகளை ஆணையம் செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.