கர்நாடகா பட்ஜெட்: ‘மத்திய அரசு அனுமதியுடன் மேகதாதுவில் அணை கட்டுவோம்’ என்கிறார் குமாரசாமி

34,000 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ததோடு தெற்கு கர்நாடக மாவட்டங்களுக்கு புதிய திட்டங்கள் அறிவிப்பு

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் அமைக்கப்பட்ட கர்நாடக அரசின் முதல் பட்ஜெட்டினை தாக்கல் செய்தார் குமாரசாமி. கர்நாடகாவின் முதல் அமைச்சர் மற்றும் நிதி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் குமாரசாமியின் பட்ஜெட்டில் சில முக்கியமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

34,000 கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்தார் கர்நாடக முதல் அமைச்சர் குமாரசாமி. மேலும் கர்பிணி பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

விவசாயக்கடன் தள்ளுபடி மற்றும் கர்பிணி பெண்களுக்கான உதவித்தொகை போன்றவை மதசார்பற்ற ஜனதா தளம் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானவை ஆகும்.

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் அமையப்பட்டிருக்கும் ஆட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

புதிதாக திட்டங்கள் அறிமுகப்படுத்துவதில் முன்னாள் முதலமைச்சர் மற்றும் கூட்டணி கமிட்டியின் தலைவருமான சித்தராம்மைய்யாவிற்கு அதிக உடன்பாடில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் கர்பிணிகளுக்கான உதவித்தொகையை ஆட்சிக்கு வரும் முன்பு ரூ. 6000 என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பட்ஜெட்டில் மாதம் ஆயிரம் ரூபாய் என மொத்த உதவித் தொகையின் மதிப்பினை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். வருகின்ற வருடங்களில் இந்த 1000 ரூபாய் ஊக்கத்தொகை அதிகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார் குமாரசாமி.

சில முக்கியமான திட்டங்கள்

மத்திய அரசின் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவித்தார்.

மூத்த குடிமக்களுக்கான பென்சன் தொகையினை ரூ.600ல் இருந்து ரூ. 1000மாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு சித்தராம்மைய்யா ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச அரிசித் திட்டமான அன்ன பாக்யா திட்டத்தின் கீழ், மானிய விலையில் 500 கிராம் துவரை பருப்பு, ஒரு கிலோ பாமாயில், ஒரு கிலோ உப்பு, ஒரு கிலோ சக்கரை வழங்கப்படும்.

மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் மிக முக்கிய இடங்களான ஹாசன், ராம நகரா மற்றும் மாண்டியா பகுதிகளுக்கு அதிக அளவு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறன.

குமாரசாமியின் தொகுதியான ராம நகராவில் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையினை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

கிராமப் புறங்களில் சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக ரூ 53,000 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்களின் வரியை முறையே ரூ 1.14 மற்றும் ரூ. 1.12 அதிகரிப்பு மற்றும் மதுபானங்களின் விலை 4% அதிகமாகும்.

இதுவே இன்றைய கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களாகும்.

×Close
×Close