Karnataka Chief Minister HD Kumaraswamy : மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் பிரகாஷ். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் வசித்து வருகிறார். திங்கள் (24/12/2018) அன்று நான்கு பேர் அடங்கிய குழு , மோட்டர் சைக்கிளில், அவருடைய காரை வழி மறித்து அவரை தாக்கியுள்ளனர்.
கத்தியால் தாக்குதலுக்கு ஆளான அவரை, அவருடைய காரிலேயே விட்டுச் சென்றுவிட்டனர், கொலையாளிகள். இந்த சம்பத்தை பார்த்தவர்கள், அவரை அருகில் இருக்கும் மாண்டியா இன்ஸ்டியூட் ஆஃப் மெடிக்கல் சையன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை பலனளிக்காததால் மரணமடைந்துவிட்டார்.
Karnataka Chief Minister HD Kumaraswamy வீடியோ
இந்த செய்தியை, கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமிக்கு போன் செய்து கூறிய போது “யாராக இருந்தாலும் ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லுங்கள். எந்த பிரச்சனையும் வரதாது” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார். இந்த நிகழ்வானது, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ஏற்பட்டுள்ளது. இவருடைய முழு உரையாடலும் காணொளியாக பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இந்த சர்ச்சைக்கு பதில் அளித்த குமாரசாமி “ பிரகாஷை கொலை செய்தவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு தான், பெயிலில் வெளியே சென்றனர். வெளியே சென்றவர்கள் மீண்டும் ஒரு கொலையை செய்துள்ளனர். பிரகாஷின் மரண செய்தி என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது. அதனால் தான் உணர்ச்சி வசப்பட்டு அப்படி பேசும்படியாகிவிட்டது. ஆனால் அவர்களை சுட்டுக் கொல்வது என்பது என்னுடைய உத்தரவல்ல என விளக்கிக் கூறியுள்ளார்.
ஆனாலும் பாஜகவினர் “இது குமாரசாமியின் சர்வாதிகாரத்தை வெளிப்படையாக காட்டுகிறது என்றும், அவர் வன்முறையை தூண்டுகிறார்” என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.