Advertisment

கர்நாடகா முதல்வர் இன்று அறிவிப்பு; முன்னிலையில் சித்தராமையா; மல்லுக்கட்டும் சிவக்குமார்

கர்நாடகா முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமை இன்று அறிவிப்பு; பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் முன்னிலையில் சித்தராமையா; கடும் போட்டி அளிக்கும் சிவக்குமார்

author-image
WebDesk
New Update
karnataka congress

karnataka congress

Manoj C G , Johnson T A

Advertisment

காங்கிரஸ் கட்சியின் 135 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரை (முதல்வர்) தேர்வு செய்ய தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அங்கீகாரம் அளித்து ஒரு வரி தீர்மானத்தை நிறைவேற்றிய ஒரு நாளுக்குப் பிறகு, முதல்வர் பதவிக்கான தீவிர லாபிக்கு மத்தியில், மாநில கட்சித் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா இருவரும் தங்கள் நிலைப்பாட்டில் நின்றதால், திங்களன்று சஸ்பென்ஸ் தொடர்ந்தது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் சித்தராமையா முன்னிலையில் இருந்தாலும், சிவக்குமார் கடுமையாக விளையாடி, தனது டெல்லி பயணத்தைத் தள்ளி வைத்தார். டெல்லி தலைமையிடம் முதல்வர் குறித்த முடிவு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவக்குமாரின் சகோதரரும், மக்களவை எம்.பி.யுமான டி.கே.சுரேஷ், அவருக்கு பதிலாக மல்லிகார்ஜூன் கார்கேவை சந்தித்தார்.

இதையும் படியுங்கள்: அதிகாரப் பகிர்வு திட்டம் ரத்து: நெருங்கும் இறுதிக் காட்சிகள்: கர்நாடக முதல்வர் யார்?

செவ்வாய்க்கிழமை இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய தலைமை இன்னும் சிவகுமாரை சமரச முடிவை ஏற்க வைக்க முடியவில்லை. திங்கள்கிழமை தனது டெல்லி பயணத்தை ரத்து செய்ததற்கு வயிற்றில் தொற்று ஏற்பட்டதாகக் கூறிய சிவக்குமார், செவ்வாய்க்கிழமை டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்களன்று அவர் அனுப்பிய மூன்று பார்வையாளர்களையும், மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவையும் மல்லிகார்ஜூன் கார்கே சந்தித்தார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அமைப்புப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலையும் சந்தித்துப் பேசினார். பார்வையாளர்களான சுஷில் குமார் ஷிண்டே, தேசிய பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் தீபக் பபாரியா ஆகியோர் பெங்களூரில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய "ரகசிய வாக்கெடுப்பின்" முடிவை மல்லிகார்ஜூன் கார்கேவிடம் தெரிவித்தனர்.

பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை தங்கள் விருப்பமாக குறிப்பிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு பெயரையோ அல்லது அவர்களின் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களையோ அல்லது தலைமை முடிவு செய்ய வேண்டுமெனில் ‘தலைமை’ என்று எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். நள்ளிரவுக்குப் பிறகு கருத்துக்கேட்பு முடிந்தது.

மாநில கட்சி வட்டாரங்களின்படி, முன்னாள் முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் பார்வையாளர்களை எம்.எல்.ஏக்களின் தனிப்பட்ட கருத்துக்களைக் கேட்க அழுத்தம் கொடுத்த பின்னர், 135 எம்.எல்.ஏ.க்களில் 90 பேர் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சிவக்குமார் குழு தனது கருத்தை தெரிவிக்காமல் புறக்கணித்துள்ளதாகவும், முதல்வர் தேர்வை மேலிடத்திற்கு விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை மாலைக்குள் கட்சி தனது முடிவை அறிவிக்கும் என்று ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார். மேலும், “பார்வையாளர்கள் காங்கிரஸ் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். சித்தராமையா, சிவக்குமார் உள்ளிட்ட அனைத்து மூத்த மாநில தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவோம், அதன்பிறகு காங்கிரஸ் தலைவர் முடிவெடுப்பார்,'' என்றும் அவர் கூறினார்.

தன்னிடம் அதிக எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையில், சித்தராமையா மாலையில் டெல்லி சென்றடைந்தார். எம்.பி.பாட்டீல், ஆர்.வீ.தேஷ்பாண்டே, ஜமீர் அகமது, கே.ஜே ஜார்ஜ், அசோக் பட்டன் மற்றும் பைரதி சுரேஷ் போன்ற அவரது நெருங்கிய ஆதரவாளர்களாக அறியப்படும் பல எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவு தெரிவிக்க டெல்லிக்கு சென்றுள்ளனர்.

பெங்களூருவில், தன்னிடம் போதுமான எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை இல்லை என்று ஒப்புக்கொண்ட சிவக்குமார், காங்கிரஸ் கட்சி 135 இடங்களை வென்றது தனது கடின உழைப்பால்தான் என்று கோடிட்டுக் காட்டினார். இக்கட்டான நேரத்தில் மாநிலக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதாகவும், அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அளித்த வாக்குறுதியின்படி கர்நாடகாவில் அரசை வழங்கியுள்ளதாகவும் சிவக்குமார் மீண்டும் வலியுறுத்தி, தனக்கு வெகுமதி அளிக்க நேரம் வந்துவிட்டதாக சுட்டிக்காட்டினார்.

“நான் ஒரு தனி மனிதன். என்னிடம் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை இல்லை. என் பக்கத்தில் உள்ள எண்ணிக்கையைப் பற்றி நான் பேச மாட்டேன். நான் இங்கு தனி நபர்களை வணங்குவதற்காக அல்ல, கட்சிக்காக வந்துள்ளேன். என்னுடன் கட்சியின் 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். நான் மாநிலக் கட்சித் தலைவர்... இன்று நம்மிடம் உள்ள எண்ணிக்கை 135,” என்று சிவக்குமார் கூறினார்.

“என்னிடம் தனிப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை எதுவும் இல்லை. எந்த எண்ணிக்கையாக இருந்தாலும், அது காங்கிரஸ் எண்ணிக்கைதான்... சோனியா காந்தி என்னை நியமித்தபோது உறுதியளித்தேன், ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோரிடம் உறுதியளித்திருந்தேன்... கர்நாடகத்தை காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவதே எனது நோக்கம். உதய்பூர், ராய்ப்பூரில் (தேசிய காங்கிரஸ் கூட்டம்) நடந்த மாநாட்டில் கூட, நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டு கர்நாடக அரசை டெல்லிக்கு வழங்குவோம் என்று உறுதியளித்தோம். அதைத்தான் நாங்கள் உறுதி செய்தோம்,'' என்று சிவக்குமார் கூறினார்.

“மற்றவர்களின் எண்ணிக்கையைப் பற்றி பேச எனக்கு பலம் இல்லை, எனது பலம் 135. நான் கட்சியின் தலைவராக இருக்கிறேன், எனது தலைமையின் கீழ், கர்நாடகாவில் இரட்டை இயந்திர ஆட்சி, ஊழல் நிர்வாகத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது," என்று சிவக்குமார் கூறினார்.

"எந்த உரிமைகோரல்களுக்கும் அல்லது எதற்கும் நான் பதிலளிக்க விரும்பவில்லை. நான் ஒரு தனி மனிதன், நான் ஒரு விஷயத்தை நம்புகிறேன், தைரியமுள்ள ஒரு மனிதன் பெரும்பான்மை பெறுகிறான். நான் நிரூபித்து விட்டேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை நான் வெளியிட விரும்பவில்லை... எதிர்காலத்தில், நான் வெளியிடலாம், ”என்று சிவக்குமார் கூறினார்.

காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஒரு ஒற்றை வரி தீர்மானத்தை நிறைவேற்றியது, முதல்வர் குறித்த முடிவை தேசிய தலைமையிடம் விடுவதாக முடிவெடுத்தது, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவக்குமார், “எனது தலைமையில், 135 எம்.எல்.ஏ.,க்கள், அவர்கள் அனைவரும் ஒரே குரலில், இந்த விஷயத்தை தேசிய தலைமைக்கு விட்டுவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்," என்று கூறினார்.

“காந்திஜி ஒரு விஷயத்தைச் சொன்னார்: நீங்கள் தோற்கடிக்கப்படும்போது தைரியமாக இருங்கள், நீங்கள் வெற்றிபெறும்போது பெரிய மனதுடன் இருங்கள். எங்களின் 15-16 எம்.எல்.ஏ.க்கள் கட்சியை விட்டு வெளியேறியபோது (2019 இல்), நாங்கள் கூட்டணி ஆட்சியை வைத்திருந்தபோது, ​​​​அதை இழந்தபோது, ​​​​நான் என் இதயத்தை இழக்கவில்லை. துணிச்சலுடன், (மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக) பொறுப்பேற்றேன்,'' என்று சிவக்குமார் கூறினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக சித்தராமையா முகாமின் கூற்றுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த சிவக்குமார் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை என்றார். “எனக்கு எம்.எல்.ஏ.,க்கள் யாரும் இல்லை, நான் யாரையும் டெல்லிக்கு அழைத்துச் செல்லவில்லை. காங்கிரஸுடன் 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர், யார் வேண்டுமானாலும் எத்தனை எம்.எல்.ஏ.,க்களை வேண்டுமானாலும் அழைத்துச் செல்லட்டும். நான் யாரையும் என்னுடன் அழைத்துச் செல்ல மாட்டேன். எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை. நான் என் வேலையை செய்துவிட்டேன்,'' என்றும் சிவக்குமார் கூறினார்.

"நீங்கள் அனைவரும் என்னை ஒரு பாறை என்று அழைத்தீர்கள். பாறையை வேண்டிக்கொள்ளலாம் அல்லது அழிக்கலாம் என்று சொல்லியிருக்கிறேன். பாறையை வைத்து நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், அதை உடைத்து தூணாகவோ, சிலையாகவோ, கற்களாகவோ செய்யலாம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், நாங்கள் சட்டமன்ற படிகளுக்கு செல்ல வேண்டும் என்று கட்சியினரிடம் கூறியுள்ளேன். அவர்கள் உணரும் விதத்தில் என்னைப் பயன்படுத்திக்கொள்ளட்டும்,” என்று சிவக்குமார் கூறினார்.

"நான் நேரத்தை உணர்ந்திருக்கிறேன். எனக்கு பொறுமை இருக்கிறது. நான் அதை எதிர்த்து போராட தயாராக இருக்கிறேன். எங்கள் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள அனைத்து யுக்திகளையும் வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளோம்,” என்று சிவக்குமார் கூறினார்.

இதற்கிடையில், கட்சிக்கு ஆதரவளிக்கும் 135 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், ஒரு கூட்டணி கட்சி எம்.எல்.ஏ மற்றும் இரண்டு சுயேட்சைகள் என மொத்தம் 138 எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை கட்சி கேட்டறிந்ததாக ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார்.

வியாழக்கிழமைக்குள் புதிய முதல்வர் பதவியேற்பார் என்று காங்கிரஸ் தெரிவித்தாலும், தனக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு தான் குறைவில்லாதவன் என்றும் வலியுறுத்தியதாகக் கூறப்படும் சிவகுமாரிடம் ஆலோசனை நடத்திய பிறகே முறையான அறிவிப்பு வெளியிடப்படும். அவரை சமாதானப்படுத்த முடியும் என கட்சி நம்புகிறது, மேலும் அவருடன் கலந்துரையாடலுக்கான பல்வேறு திட்டங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு மே 10 ஆம் தேதி நடந்த தேர்தலில், காங்கிரஸ் 135 இடங்களைப் பெற்று அமோக வெற்றியைப் பெற்றது, அதே நேரத்தில் ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க மற்றும் முன்னாள் பிரதமர் எச்.டி தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் முறையே 66 மற்றும் 19 இடங்களைப் பெற்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment